world

img

கோவிட் 19- அமெரிக்காவில் 8 லட்சம் பேர் பலி  

 

கோவிட் 19 வைரஸ் தாக்குதல் காரணமாக அமெரிக்காவில் தற்போது வரை 8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கோவிட் 19 வைரசின் தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட இந்த புதிய வைரஸ் இரண்டாண்டுகளை கடந்தும் தற்போது வரை உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள புதிய தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டபோதிலும் வைரசின் பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.

குறிப்பாக, இந்த வைரஸ் குறுகிய காலத்திற்குள் தன்னை உருமாற்றி தனது பரவல் மற்றும் வீரியத்தின் குணத்தை மாற்றி வருகிறது. இதேபோல் தடுப்பூசியின் உற்பத்திகள் அதிகரித்த போதிலும் அதன் பயன் இன்னும் ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளை போய் சேரவில்லை. இதன்காரணமாக வைரசின் பரவல் கட்டுக்குள் வரமறுத்து வருகிறது.

இதற்கிடையே, அண்மைகாலமாக கோவிட் 19 வைரஸ் தன் இயல்பை மாற்றி ஒமைக்ரான் என்ற புதிய உருமாற்றியாக உருவெடுத்துள்ளது. இதன் பரவல் வேகம் கடந்த காலங்களைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக தற்போதைக்கு இந்த வைரசின் தாக்குதலில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது என்கிற அபாயம் எழுந்துள்ளது.

இந்நிலையில், உலகின் வல்லரசு நாடு என அழைக்கப்படும் அமெரிக்கா கோவிட் 19 வைரஸ் தாக்குதலால் நிலைகுழைந்து போய் உள்ளது. இந்நாட்டில் மட்டும் தற்போது வரை 8 லட்சம் பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கும் கோவிட் 19 வைரசிற்கு எதிரான முதல் தடுப்பூசி கடந்தாண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை முதலில் செலுத்திக் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதனால் அமெரிக்க இயல்பு நிலைக்கு திரும்பும் என்று கருதப்பட்டது.

ஆனால், இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த துவங்கிய காலத்திற்கு பின்னர் மட்டும் தற்போது வரை 5 லட்சம் பேர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த உயிரிழப்பு சமீபகாலமாக மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இச்சூழலில் கோவிட் 19-ன் புதிய உருமாற்றியான ஒமைக்ரான் வைரசின் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் அமெரிக்கர்கள் மீண்டும் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.