ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்து உள்ளது.
ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் மாகாணத்தில் காம்திஷ் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாகப் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 12 கி.மீ நீளத்திற்குச் சாலைகள் சேதமடைந்துள்ளது. 173 வீடுகள் நாசமாகியுள்ளன எனப் பேரிடர் மேலாண்மைக்கான மாநில மந்திரி குலாம் பகாவுதீன் ஜெய்லானி தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர். 70 பேர் காயமடைந்து உள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மீட்புப் பணிகளில் தாலிபான்கள் இடையூறு ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்குப் பதில் அளித்துள்ள தாலிபான்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசுப் படைகள் ஊடுருவலைத் தடுக்கவே முயற்சிப்பதாகவும், மீட்புப் பணிக்கு எவ்வித தடையும் தாங்கள் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நூரிஸ்தான் ஆளுநர் ஹபீஸ் அப்துல் கயும் கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவிகளைச் செய்து வருவதாகவும், கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராத்தின் சில பகுதிகளைத் தாக்கிய கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நெருக்கடியில் உள்ளதாகவும், அவர்களுக்கு அவசர உதவி தேவை எனவும் நூரிஸ்தானைச் சேர்ந்த எம்.பி இஸ்மாயின் அடிகன்
தெரிவித்துள்ளார்.