world

img

வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்: பாகிஸ்தான் வெள்ளம் குறித்து குட்டெரஸ் கருத்து

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை இதுவரையில் காணாத பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக, அந்நாட்டுக்கு பயணம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் சுமார் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனின் பரப்பளவுக்கு இணையான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உயிரிழப்பும் மேலும் அதிகமாகவே இருக்கும் என்றும், இன்னும் பல பகுதிகளுக்கு நிவாரணப் பணிகள் சென்றடையாத சூழல் இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. விவசாய நிலங்களில் வெள்ள நீர் பாய்ந்ததால் ஏராளமான பயிர்கள் சேதமடைந்து வீணாகியுள்ளன. ஏராளமான வீடுகள், வணிக மையங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் தகர்ந்து போயிருக்கின்றன.

கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை வைத்தது. 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் சேத மதிப்பு இருக்கும் என்று அதிகாரபூர்வமாக அந்நாட்டு அரசு கூறுகிறது. இந்நிலையில்தான் வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் முடிவு செய்தார். பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இன்று என்ன பார்த்தேன் என்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. உலக அளவில்  மனிதகுலத்தை உலுக்கும் பல்வேறு பேரழிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இது போன்ற ஒன்றைப் பார்க்கவில்லை" என்றார்.

மேலும் பேசிய அவர், "பாகிஸ்தானின் தென்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. என்னுடைய இந்தப் பயணம் நிவாரண நிதிக்கான கோரிக்கைக்கு வலு சேர்க்கும். உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் தட்பவெப்பநிலை மாற்றமே இந்த பேரழிவுக்குக் காரணமாகும். பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணக்கார நாடுகளே இந்த அச்சுறுத்தலுக்குக் காரணமாக உள்ளன. அந்த நாடுகள்தான் இதுபோன்ற பேரழிவுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எப்போதுமே மழை கொட்டித் தீர்க்கும் வகையில்தான் பாகிஸ்தானில் இருக்கும். அப்போதும் விவசாயம் மற்றும் தண்ணீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கவே செய்யும். இந்த ஆண்டு, அந்த சேதங்களை எல்லாம் தாண்டி பெருமழை பெய்ததோடு, பனிமலைகள் உருகுவதும் அதிகமாக இருந்தது. தற்போதைய வெள்ளத்தால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சம் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 7 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கான சாலைகள் தகர்ந்துள்ளன. இவற்றையெல்லாம் பார்த்துத் தெரிந்து கொண்ட குட்டெரெஸ், "சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு இந்த உலகம் போதிய கவனத்தை அளிக்கவில்லை. அதிலும் குறிப்பாக, பெருமளவில் தொழில் மயமாகியுள்ள நாடுகள் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை" என்றார்.

5 மடங்கு மழை

2022 ஆம் ஆண்டில் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அளவு அதிகமாக மழை பெய்துள்ளதாக பாகிஸ்தான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிந்து மாகாணத்தில் உள்ள படிடான் என்ற சிறு நகரம் 1.8 மீட்டர் அளவுக்கு நீரில் மூழ்கிக் கிடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏரிகளும், ஆறுகளும் தங்கள் கரைகளை உடைத்துக் கொண்டு உக்கிரமாக நகரங்களுக்குள்ளும், கிராமங்களுக்குள்ளும் பாய்ந்துள்ளன.

யுனெஸ்கோவின் பாரம்பரிய வரலாற்றுத் தலமான மொகஞ்சதாரோவும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆய்வாளர்களும், நிபுணர்களும் அந்த இடத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள். 4 ஆயிரத்து 500 ஆண்டு பழமையான இந்த இடத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசும் பார்வைட்டார். அந்த இடத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார். அவரின் பயணம் பற்றிக் கேள்விப்பட்டவர்கள், "ஏழைகளுக்காக இவர் ஏதாவது செய்தாக வேண்டும். குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன" என்றனர்.

;