டோக்கியோ, ஜூலை 24- ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கும் அணுஆயுதங்களைத் தடை செய்யும் உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஜப்பானில் ஆதரவு பெருகி வருகிறது. ஜப்பானில் உள்ள பெரு நகரம், சிறு நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள அவைகள் தீர்மானங்களை இயற்றி வருகின்றன. அந்நாட்டில் மொத்தம் 1,788 அவைகள் உள்ளன. மக்களின் கோரிக்கைகள் வலுத்து வருவதால் இந்த அவைகளில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளது. இதுவரையில் 659 அவைகளில் தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. மொத்தமுள்ள அவைகளில் இது 37 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2020 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கோஃபு என்ற மாகாணத்தின் அவை, மக்களின் கோரிக்கையை நிராகரித்தது. ஐ.நா. சபை முன்வைக்கும் உடன்பாட்டில் ஜப்பான் அரசு கையெழுத்திட வேண்டும் என்ற தீர்மானத்தை அவையில் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரினர். ஆனால் அந்த மாகாண அவை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகியுள்ளதால் கோஃபு மாகாண அவை அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதைத் தொடர்ந்து மேலும் பல மாகாணங்கள் மற்றும் நகரங்கள் பின்தொடர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் தங்கள் பிரச்சாரத்தை அதிகப்படுத்தியுள்ளன.