world

img

விரிகின்றன ஈரானின் கரங்கள் கம்போடியாவும் அழைப்பு

தங்கள் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறியும் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரானுக்கு கம்போடியா அழைப்பு விடுத்திருக்கிறது.

அண்மையில் எண்ணெய் வளம் கண்டறிவது மற்றும் சுத்திகரிப்பு வேலைகளைச் செய்ய தொழிற்சாலைகளை அமைப்பது ஆகியவற்றிற்காக வெனிசுலாவும், ஈரானும் உடன்பாடுகளில் கையெழுத்திட்டன. அமெரிக்காவின் தடைகளை மீறி இந்த உடன்பாடுகள் உருவாகின. அமெரிக்காவின் எதிர்மறை நடவடிக்கைகளால் வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தடைகளை எதிர்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உடன்பாடுகளை அடுத்து, ஈரான் தனது சர்வதேச அளவிலான வர்த்தக செயல்பாடுகளை அதிகரித்து வருகிறது. தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவுடன் உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது. அண்மையில் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கம்போடியாவில் உள்ள எண்ணெய் வளங்களை ஆய்வு செய்யுமாறு ஈரானின் தூதர் அலி அக்பர் நசாரியிடம் கம்போடிய அமைச்சர் சுய் செம் கோரிக்கை வைத்துள்ளார். 

ஏற்கனவே இருக்கும் எண்ணெய் வயல்களை மேம்படுத்தவும், புதிய வயல்களைக் கண்டறியவும் உதவுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கம்போடிய பெட்ரோலியத்துறையின் செயல் இயக்குநர் சீப் சோர், "மிகப்பெரும் அனுபவம் ஈரான் வசம் உள்ளது. தற்போதைய பேச்சுவார்த்தை முதல் கட்டத்தில் இருக்கிறது. ஆனால் இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வளர்த்தெடுக்கும்" என்று தெரிவித்தார்.

எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக உருவாக வேண்டும் என்று நீண்ட காலமாக கம்போடியா திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஈரானுடனான உறவு தங்கள் முயற்சிகளுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்று கம்போடியா எதிர்பார்க்கிறது. மீண்டும் 3 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி என்ற நிலையை மீட்போம் என்றும், சுத்திகரிப்பு ஆலை ஈரான் உதவியோடு அமைக்கப்படும் என்று கம்போடியா தெரிவித்துள்ளது.