கடந்த 2006 முதல் 2023 வரை 19 காமன்வெல்த் நாடுகளில் 213 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்; அவற்றில் 96% கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என காமன்வெல்த் மனித உரிமை முன்னெடுப்பு (CHRI), காமன்வெல்த் பத்திரிகையாளர்கள் சங்கம் (CJA), மற்றும் காமன்வெல்த் சட்டவாதிகள் சங்கம் இணைந்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் தேசிய சட்ட அடித்தளங்களை விரிவாக ஆய்வு செய்ததின் அடிப்படையில், ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் கரீபியன், ஐரோப்பா மற்றும் பசிபிக் பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் 35 வழக்கறிஞர்களின் சாட்சியங்களைச் சேர்த்து, “யார் பின்னிருந்து கட்டுப்படுத்துகிறார்கள்? — காமன்வெல்தில் கருத்துரிமைக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டத் தடைகள்” என்ற தலைப்பில் காமன்வெல்த் மனித உரிமை முன்னெடுப்பு (CHRI), காமன்வெல்த் பத்திரிகையாளர்கள் சங்கம் (CJA), மற்றும் காமன்வெல்த் சட்டவாதிகள் சங்கம் இணைந்து ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், கடந்த 2006 முதல் 2023 வரை 19 காமன்வெல்த் நாடுகளில் 213 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்; அவற்றில் 96% கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
56 காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தேசிய சட்டங்கள் பலவற்றில் பத்திரிகைச் சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் கடுமையாக நசுக்கும் விதமாகவும் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு மற்றும் தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றவியல் விதிகளையும், தேசிய பாதுகாப்பு சட்டங்களை மீறுதல் ஆகிய சட்டப்பிரிவுகளையும் பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் ஆகியோரை அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்பதும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
காமன்வெல்த்தின் கடந்தகால செயலற்ற தன்மை, சில உறுப்பு நாடுகளில் கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் கடுமையான மற்றும் தொடர்ச்சியான சவால்களை ஏற்படுத்தியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.