world

img

“இணைகின்றன பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்கள்”

பிரேசிலியா, ஜன.7- பிரேசிலில் இடதுசாரி ஜனாதிபதி லூலாவின் வெற்றியைத் தொடர்ந்து தென் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரேசில் ஜனாதிபதியாக லூலா பொறுப்பேற்ற அன்று, பல நாடுகளின் தலைவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பின்னர், தனித்தனியாக நடந்த சந்திப்புகளில் ஒன்றுபட்ட தென் அமெரிக்காவின் பலன்கள் பற்றி விவாதித்துள்ளார்கள். தென் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் இடதுசாரித் தலைவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  லூலாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிலியின் ஜனாதிபதி காப்ரியல் போரிக், “இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டோம். மிக நல்ல முறையில் பிரேசில் மற்றும் சிலி ஆகிய நாடுகளின் உறவுகள் இருந்தன. அந்தப் பழைய நிலைமைக்கு இரு நாடுகளின் உறவுகளைக் கொண்டு வர வேண்டும் என்று இருவரும் உறுதியாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். பிரேசிலின் புதிய சிலி தூதுவராக செபாஸ்டியன் டெபோலோ பொறுப்பேற்றுள்ளார். பிரேசிலுடனான உறவில் இரு கடல்களை இணைக்கும் பாதையை உருவாக்குவதற்கு பெரும் முக்கியத்துவம் தர சிலி முடிவு செய்திருக்கிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடல்களை இணைக்கும் பாதையை அமைத்தால் சிலி, அர்ஜெண்டினா, பராகுவே மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை அது இணைக்கும். தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலுடன்தான் அதிக அளவில் வர்த்தகத்தை சிலி மேற்கொள்கிறது. இந்த விஷயத்தில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இரு தரப்பு உறவுகள் பலப்பட்டால், இந்த வர்த்தகமும் அதிகரிக்கும் என்று சிலி எதிர்பார்க்கிறது. அர்ஜெண்டினா பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்ற அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி அல்பெர்ட்டோ பெர்னாண்டஸ், “மிகவும் சிறப்பான சந்திப்பாக இது அமைந்தது. தனிப்பட்ட முறையில், லூலாவின் வெற்றி பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இரு தரப்பு உறவுகளை புதுப்பிக்க முடிவு எடுத்திருக்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் கடினமாக இருந்தது.

ஆனால் இருதரப்பு உறவின் அவசியத்தை தற்போது நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்” என்றார். செலாக் என்று அழைக்கப்படும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றிய உறுதியையும் அவர் அளித்தார். வெனிசுலா பிரேசிலில் மீண்டும் வெனிசுலாவின் தூதரகம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ, வெனிசுலாவின் எதிர்க்கட்சியினர் அமைத்த போட்டி அரசுக்கு அங்கீகாரம் அளித்தார். வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரத்தில் குழப்பங்களை விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தார். லூலாவின் வெற்றியால் இரு தரப்பு உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.  மெக்சிகோ மெக்சிகோவின் இடதுசாரி ஜனாதிபதியான அம்லோ(ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்) கூறுகையில், “பிரேசிலில் புதிதாகப் பொறுபேற்றிருக்கும் அரசு சமத்துவத்திற்கும், நீதிக்கும் போராடும். இந்தத் தருணத்தில் இருந்து இரண்டு நாடுகளுக்கிடையிலான சகோதரத்துவம் பலப்படுத்தப்படும். தற்போது வந்திருப்பது மக்களின் விருப்பம். வெகு சிலருக்காக ஆட்சி செய்பவர்கள் அல்ல” என்றார். லூலாவின் பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ கலந்து கொள்ளவில்லை. தேர்தலின்போது அவருக்கு இருந்த ஆதரவில் தற்போது சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவை ஏற்க மறுக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.