பிரேக், நவ.29- ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் கிட்டத்தட்ட 750 ராணுவ முகாம்களை அமெரிக்கா அமைத்துள்ளது. தனது முகாம்கள் குறித்த விபரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்திருப்பதால் இந்த முகாம்களின் எண்ணிக்கையை முழுமையாக தொகுக்கப்படவில்லை. ஐரோப்பியக் கண்டத்திலும் பல முகாம்கள் உள்ளன. ஜெர்மனியில் ராம்ஸ்டின் என்ற இடத்தில் தான் பெரிய முகாம் அமைத்துள்ளார்கள். இங்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலி, கொசோவோ, நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரீஸ் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளில் பல அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. நேட்டோ பெயரில் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைத்தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் பாதுகாப்பைத் தரும் என்ற கருத்து முதலில் மக்களிடம் இருந்தது. அக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டு, அத்தகைய முகாம்கள் தாக்குதல்களுக்கான இலக்குகளாக மாறியுள்ளன.
இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்று கோரி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போர்ச்சுக்கலில் பெரும் எழுச்சியுடன் மக்கள் பேரணிகளில் கலந்து கொண்டனர். மக்களின் அனுமதியின்றி போர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பேரணிகளில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகிறார்கள். கிரீசில், தங்கள் நாட்டு மண்ணை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தக்கூடாது என்று கோரிக்கையை முன்வைத்து கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி வருகிறது. மேலும், தடைகளால் கிரீஸ் பாதிக்கப்படுகிறது என்றும், சுமைகளைத் தங்கள் மக்கள் சுமப்பது சரியல்ல என்றும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் எதிர்ப்பை மீறி அமெரிக்கப் படையினர் வந்தபோது அவர்களை வழிமறித்து மக்கள் திருப்பி அனுப்பினார்கள். கிரீஸ் துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்த முயன்றபோது,
கடலில் இறங்கிப் போராடுவோம் என்று எதிர்ப்புக் குரல் எழுந்தது. செக் குடியரசில் ஆவேசம் செக் குடியரசில் “அமெரிக்க முகாம்கள் அமெரிக்காவிலேயே இருக்கட்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி மக்கள் பேரணியில் பங்கேற்றுள்ளார்கள். அந்நாட்டின் தலைநகர் பிராக்கில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். உக்ரைனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு வர்த்தக மற்றும் எரிபொருள் தொடர்பான கொள்கைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் மட்டுமே கண்டத்தில் அமைதி ஏற்படும் என்றும், எரிவாயு விநியோகம் குறித்து உடனடியாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பேரணியில் பேசியவர்கள் வலியுறுத்தினர். கடந்த சில மாதங்களாகவே செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாதகாலத்தில் நடந்தவற்றில் அரசுகள் பதவி விலக வேண்டும் என்ற முழக்கமும் எழுந்துள்ளது.