பயனர்கள் தங்கள் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே இழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது ஓடிடி பிளாட்பார்ம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. திரையரங்குகளின் சென்று குடும்பத்தோடு திரைப்படம் பார்த்தால் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலவாகிறது என்பதால் வீட்டில் இருந்துகொண்டே ஓடிடியில் படம் பார்க்கும் வழக்கம் தற்போது பொது மக்களிடம் அதிகரித்து வருகிறது.
இதனால் ஓடிடி தளங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை வாங்கி தங்களது சந்தாதாரர்களுக்குத் திருப்தி அளித்து வருகின்றன.
இந்த நிலையில் ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான விவரங்களை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் 9.7 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை 3 மாதங்களில் இழந்துள்ளது. முன்னதாக, ஜனவரி-மார்ச் காலாண்டில் சுமார் 2 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் தற்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் 221 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம், மற்ற நிறுவனங்களின் போட்டி, சப்ஸ்கிரைபர்கள் பாஸ்வேர்டு பகிர்தல் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. இதை சமாளிப்பதற்காக நெட்ஃபிளிக்ஸ் குறைந்த கட்டணத்தில் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் வீடியோ பார்க்கும்போது விளம்பரங்கள் வரும். ஆனால் கட்டணம் குறைவு. இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் நெட்ஃபிளிக்ஸ் கைகோர்த்துள்ளது. மேலும் சப்ஸ்கிரைபர்கள் மற்றவர்களுடன் பாஸ்வேர்டை பகிர்வதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.