பெய்ஜிங், மார்ச் 27- தைவானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டு, சீனாவுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதாக மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் அறிவித்துள்ளது. 1949 ஆம் ஆண்டில் கியாங்கேஷேக் தலைமை யிலான மக்கள் விரோத அரசை, சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி அகற்றியது. தைவானுக்கு தப்பிச் சென்ற சியாங்கேஷேக், அங்குள்ள தனது அரசுதான் உண்மையான சீன அரசு என்று கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அவருக்கு ஆதரவு தந்தன. 1969 ஆம் ஆண்டில் 71 நாடு கள் தைவானைத்தான் உண்மையான சீனா என்று கூறின. அப்போது 48 நாடுகள்தான் சீன மக்கள் குடியரசை அங்கீகரித்தன. தற்போது வெறும் 13 நாடுகள்தான் தைவானை அங்கீகரித்துள்ளன. 182 நாடுகள் சீன மக்கள் குடியரசுதான் உண்மையான சீனா என்று அங்கீகரிக்கின்றன. தைவானை வைத்து சீனாவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் உத்தி தோல்வி யடைந்துள்ளது. தற்போது தைவானுடன் உறவு வைத்து,
அதை உண்மையான சீனா என்று அங்கீகரித்து வந்த மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசும் கைகழுவிவிட்டது. தைவானுட னான தூதரக உறவை அந்நாடு முறித்துக் கொண்டு விட்டது. சீனாவுடன் தூதரக உறவை மேற்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகில் ஒரே சீனாதான் இருக்கிறது என்பதை ஹோண்டுராஸ் குடியரசின் அரசு அங்கீகரிக்கிறது. ஒட்டுமொத்த சீனாவை சீன மக்கள் குடியரசுதான் பிரதி நிதித்துவப்படுத்துகிறது. சீனப்பகுதியின் பிரிக்க முடியாத அங்கமாக தைவானைப் பார்க்கிறோம். எனவே தைவானுடனான தூதரக உறவை முறித்துக் கொள்கிறோம் என்று தகவல் தெரிவித்து விட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங் மற்றும் ஹோண்டுராஸ் வெளி யுறவுத்துறை அமைச்சர் எட்வர்டோ என்ரிக் ரெய்னா ஆகிய இருவரும் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த உடன்பாட்டின்படி, சீன மக்கள் குடியரசுடன் அரசு ரீதியான உறவு உருவாவதோடு, தைவானுடனான உறவு முறிந்து விடுகிறது. 1941 ஆம் ஆண்டில் தைவான்தான் உண்மையான சீனா என்று அங்கீகரித்த ஹோண்டுராஸ், 82 ஆண்டுகளுக்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசை அங்கீகரித்திருக்கிறது.
தைவான் எதிர்ப்பு
சீனாவுடனான ஹோண்டுராசின் உடன் பாட்டிற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அந்நாட்டுடனான உறவு முறிந்துவிட்டது என்றும், இது வருத்தத்துக்குரியது என்றும் தைவான் பகுதியின் தலைவர் டிசாய் இங்-வென் கூறி யுள்ளார். தாங்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து வாழ விரும்புகிறோம் என்று குறிப்பிட்ட அவர், தற்போது தங்களுடன் தொடர்புள்ள நாடுகளுடன் இணைந்து மற்ற நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப் போம் என்றும் கூறியுள்ளார்.
காஸ்ட்ரோவின் முன்முயற்சி
சீனாவுடனான உறவுகள் மலர்ந்ததற்கு ஹோண்டுராசின் ஜனாதிபதி சியாமரோ காஸ்ட்ரோவின் முன்முயற்சி முக்கியமான காரண மாகும். 2021 ஆம் ஆண்டில் இடதுசாரி வேட்பாள ராகக் களம் கண்டு, ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட அவர், மார்ச் மாதத்துவக்கத்தி லேயே, சீனாவுடனான உறவுமலரும் என்றும் அதற்குத்தேவையான நடவடிக்கைகளை எடுக்கு மாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ரெய்னா வுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகையில் வெளியுறவுக் கொள்கை குறித்த தேர்தல் அறிக்கையில் இதைக் குறிப்பிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.