what-they-told

img

இந்நாள் அக்டோபர் 18 இதற்கு முன்னால்

1951 - மேற்கு ஜெர்மனி ஒலிபரப்பு அமைப்பின் சார்பாக, உலகிலேயே முதன்முறையாக மின்னணு இசைக்கான ஒலிப்பதிவுக்கூடம்(ஸ்டுடியோ ஃபார்  எலெக்ட்ரானிக் மியூசிக்), கலோன் நகரில் நிறுவப்பட்டது. மின்னணு இசை என்பது, மின்சாரக் கருவிகளைக்கொண்டு உருவாக்கும் இசையிலிருந்து மாறுபட்டது. மின்சார கிட்டார் போன்றவை மின்சார இசைக்கருவிகளாகும். இவை இயங்குவதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமே தவிர, இசை என்பது இசைக்கருவியினுடையதுதான். மாறாக, மின்னணு இசை என்பதில், மின் சுற்றைப் பயன் படுத்தி, செயற்கையாக ஒலிகள் எழுப்பப்படுகின்றன. உதா ரணமாக, நாம் பயன்படுத்தும் கீபோர்ட் என்ற இசைக்கருவி, அதனுடன் இல்லாத பல இசைக்கருவிகளின் ஒலிகளை செயற்கையாக எழுப்புவதைக் காணலாம். மின்சாரத்தின் வரவைத் தொடர்ந்து, 1753இலேயே அதைப்போலவே, இசையை(ஒலியை) பதிவு செய்யும் கருவிகளையும் மின்சாரம் உருவாக்கினாலும், அவை பதிவு செய்யப்பட்ட ஒலிகளைத் திரும்ப எழுப்ப முடிந்ததே தவிர, செயற்கை யாக ஒலியை ஏற்படுத்த முடியவில்லை. 1906இல் கண்டு பிடிக்கப்பட்ட ஆடியன் என்ற கருவியே மின்னணு இசைக்கு தொடக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. வெற்றிடக் குழாய்களின் (டையோட்) காலத்தில், லீ-டி-ஃபாரஸ்ட் என்ற அமெரிக்கப் பொறியாளரால், மூன்று எலெக்ரோடுகளுடன்(ட்ரையோட்!), வாயு நிரப்பப்பட்ட குழாயாக உருவாக்கப்பட்ட இது, மின்னணு சமிக்ஞைகளை அதிகரிக்கும் திறன்  பெற்றிருந்தது. செயற்கையாக ஒலியை வெற்றிடக்குழாய் கள் உருவாக்கத் தொடங்கியதையடுத்து, சோவியத்தின் லியான் தெரமின் 1919இல் உருவாக்கிய தொடாமலே இயங்கும் தெரமின் என்ற இசைக்கருவி, செயற்கை இசையைத் தொடங்கிவைத்தது. இத்தகைய ஏராளமான புதிய இசைக்கருவிகள் 1920,30களில் உருவாயின. 1940களில் உருவான மின்காந்த நாடா, பதிவு செய்யப்பட்ட இசையின் வேகம் முதலானவற்றை மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியை உருவாக்கியது. இத்தகைய முன்னேற்றங்களைப் பயன்படுத்தும், மேம்படுத்தும் நோக்கங்களுடன், மேற்குறிப்பட்ட ஒலிப்பதிவுக்கூடம் உருவாக்கப்பட்டது. எந்திரங்களால் உருவாக்க முடியாத ஒலிகளான பேச்சு, பாடல் முதலான இயற்கை ஒலிகளைப் பதிவு செய்யும் வசதி, 1953-54இல்தான் இந்த ஒலிப்பதிவுக்கூடத்தில் சேர்க்கப்பட்டது! கணினிகளின் வரவைத் தொடர்ந்து, கற்பனைகூட செய்திராத முன்னேற்றங்களை எட்டிய மின்னணு இசையின் பயணத்துடனே பயணித்த இந்த ஒலிப்பதிவுக்கூடம், தானியங்கி பகுப்பு வசதிகளையும்கூட 1971இலேயே பெற்றுவிட்டது. ஆனாலும், உலகம் முழுவதும் உருவான புதிய தொழில்நுட்பங்களுடன்கூடிய ஒலிப்பதிவுக்கூடங்களுடன் போட்டியிட முடியாமல் 2000ங்களின் தொடக்கத்தில் மூடப்பட்ட இதனை, 2017 அக்டோ பர் 18இல் கூகுள் ஒரு டூடுல் வெளியிட்டு கவுரவித்தது.