455 - சேதப்படுத்துதலை ‘வண்ட லிசம்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடக் காரணமான, வண்டல்களின் ரோம் நகரக் கொள்ளை தொடங்கியது. வண்டல் என்பது ஒரு கிழக்கு ஜெர்மானியப் பழங்குடியினம். ஸ்காண்டிநேவியாவின் தென்பகுதியிலிருந்து கி.மு.2ஆம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்தவர்களாகக் கருதப்படும் இவர்கள் தற்காலத்திய போலந்தின் தென்பகுதியில் காணப்பட்டதுதான் முதன்முதலில் பதிவாகியுள்ளது. பிற பழங்குடியினங்களின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்துகொண்டே வந்த இவர்கள், 419இல் வடஆப்ரிக்காவுக்கு வந்து, ஜென்செரிக் என்ற அரசர் முயற்சியில் ஒரு முடியரசை நிர்மாணித்தனர். வடஆப்ரிக்காவிலிருந்த ரோமானிய மாநிலத்தையும் அவர் கைப்பற்றிவிட, அதுகுறித்தான பிரச்சனையில், ரோமப் பேரரசர் மூன்றாம் வாலண்ட்டீனியனின் மகளுக்கு ஜென்செரிக்கின் மகனைத் திருமணம் செய்வதன்மூலம் உறவு ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டு, 442இல் ஓர் அமைதி ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இளவரசி யூடோஷியாவுக்கு மூன்று வயதுதான் என்பதால், திருமணம் தாமதப்பட்ட நிலையில், வேலண்டீனியன் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னணியிலிருந்த செனட்டர் பெட்ரோனியஸ் மேக்சிமஸ், ஆட்சியைக் கைப்பற்றி, வேலண்டீனியனின் மனைவியையும் (அரசி யூடோக்சியா) கட்டாயத் திருமணம் செய்துகொண்டதுடன், தன் மகன் பல்லாடியசுக்கு இளவரசி யூடோஷியாவையும் திருமணம் செய்துவிட்டார். மேக்சிமசின் சதிகளை வண்டல்களுக்கு அரசி தெரிவிக்க, திருமணம் நடக்காததால் அமைதி ஒப்பந்தம் ரத்தானதாகக்கூறி, ஜென்செரிக் ரோம்மீது படையெடுத்தார். தப்பிச்சென்ற மேக்சிமஸ் ரோமானியர்களாலேயே கொல்லப்பட்டார்.
தொன்மையான ரோம் நகரை அழிக்கவோ, கொலைகள் செய்யவோ வேண்டாமென்று ஜென்செரிக்கை திருத்தந்தை முதலாம் லியோ கேட்டுக்கொண்டதாகவும், ஜென்செரிக் அவ்வாறே செய்தாலும், 14 நாட்களில் ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றதாகவும், ஜூபிடர் ஆப்டிமஸ் மேக்சிமஸ் ஆலயம் உள்ளிட்ட பல பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களைச் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. வேறு அழிவுகள் எதனையும் அதன்பின் வண்டல்கள் செய்யாவிட்டாலும், 1694இல் ஆங்கிலேயக் கவிஞர் ஜான் ட்ரைடன், முரட்டு வடபகுதி இனமான கோத்தியர்கள், வண்டல்கள் மதிப்பில்லாத சின்னங்களை சேதப்படுத்தியதாக எழுதினார். பிரெஞ்சுப் புரட்சியின்போது, கலைப் படைப்புகள் அழிக்கப்படுவதைக் குறிக்க ‘வண்டலிசம்’ என்ற சொல்லை, ப்ளாய்ஸ் நகரின் ஆயர் ஹென்றி கிரிகோரி உருவாக்க, அதுவே நிலைத்துவிட்டது.