what-they-told

img

பாசிசத்தின் 14 தன்மைகள்

உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான உம்பேர்ட்டொ ஈக்கோ, பாசிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சிக்காலத்தில் இத்தாலியில் வாழ்ந்தவர். பாசிசம் பல வடிவங்களை எடுக்கும். ஆனால் அதன் பெயர் மட்டும் மாறாது” என்று சொன்னவர். அவர் அதனை ‘நிரந்தர பாசிசம்’ என்று அழைத்தார். அதன் 14 “பிரத்யேக” தன்மைகளைப் பட்டியலிட்டார். “இந்த தன்மைகளை ஒரு அமைப்புக்குள் ஒழுங்குபடுத்திட முடியாது. அவற்றுள் ஒன்றுக்கொன்று முரணானவை; வேறு விதமான சர்வாதிகாரத்திற்கும் வெறித்தனத்திற்கும் இதே தன்மைகள் உண்டு. ஆனால் இவற்றில் ஒரு தன்மை இருந்தால் கூடப் போதும்; அதைச் சுற்றி பாசிசம் உறைந்துவிடும்,” என்றார். அவர் பட்டியலிட்ட 14 தன்மைகள்

1. பாரம்பரியத்தை வழிபடுவது.

“எந்த ஒரு பாசிச இயக்கத்தின் பாடத்திட்டத்தை எடுத்துப் பார்த்தாலும் அதில் பாரம்பரியவாத சிந்தனையாளர்கள் இருப்பது தெரியும்.

2. பாரம்பரிய வாதம், பல்சமய நம்பிக்கைகள், நடைமுறைகளின் இணைப்பு, அமானுஷ்யம் ஆகியவற்றால் ஊட்டம் பெற்றதுதான் நாஜி ஆன்மீக அறிவு.

3. நவீனத்தை மறுதலிப்பது

அறிவொளி யுகத்தை, பகுத்தறிவு காலத்தை நவீனகால ஒழுக்கக்கேட்டின் துவக்கமாகக் காண்பது. இந்தப் பொருளை வைத்துப் பார்க்கும்போது ஊர் பாசிசம் என்பதை பகுத்தறிவுவிரோத வாதமாகப் பார்க்கலாம்.

4. ஏதாவது செய்யவேண்டுமென்பதற்காக ஒரு செயலை வழிபாடு போல் செய்வது

“செயல்பாடு என்பதே அழகுதான். அதைப் பற்றி முன்னரே யோசிக்காமல் அல்லது யோசனையே தேவையில்லையென்று செயல்படுவது. சிந்தனையென்பதே ஒருவித ஆண்மை நீக்கம் என்று நினைப்பது.

5. கருத்து வேறுபாடு என்பது துரோகம்

“விமர்சன ரீதியான அணுகுமுறை விஷயங்களைப் பகுத்துப் பார்க்கும். அது நவீனத்துவத்தின் அடையாளம். நவீன கலாச்சாரத்தில் கருத்து வேறுபாடு அறிவை வளர்க்கும் ஒரு வழிமுறை என்று அறிவியலாளர் சமூகம் அதனை வரவேற்கிறது.

6. வேறுபாட்டைக் கண்டு அஞ்சுவது

“பாசிச அல்லது ஆரம்பகால பாசிச சிந்தைனையாளர்களின் முதல் முறையீடே அழைப்பின்றி நுழைபவர்களுக்கு எதிராகத்தான். அதானல்தான் பாசிசம் என்பது இனவெறி என்று வரையறுக்கப்படுகிறது.

7. சமூக ஏமாற்றங்களைப் பயன்படுத்திக்கொள்வது

பொருளாதார நெருக்கடியினாலோ, அரசியல்ரீதியாக சிறுமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்கிற உணர்வுகளாலோ, சமுதாயத்தின் அடித்தட்டிலிருக்கும் மக்கள் கொடுக்கும் அழுத்தத்தை எதிர் கொள்வதினால் எழும் பயத்தாலோ வெறுப்புற்றிருக்கும் மத்தியதர வர்க்கத்தின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதுதான் பாசிச வரலாற்றின் ஒரு உள்ளார்ந்த தன்மையாக இருக்கிறது.

8. சதி நடக்கிறது என்கிற உணர்வினால் ஆட்டிப்படைக்கப்படுவது

பாசிசத்தின் ஆதராவளர்கள் எப்போதுமே தாங்கள் ஆக்கிரமிப்பிற்குள்ளாயிருப்பது போன்ற உணர்வில் வைத்திருப்பது. இந்த சதியை வெல்லும் ஒரே எளிய வழி அன்னியர்களுக்கு எதிரான வெறி.

9. எதிரி ஒரு சேர வலுவானவனாகவும், வலுவற்றவனாகவும் இருக்கிறான்

“எதிரிகள் வலுவானவர்கள் என்றும் அதே நேரத்தில் பலவீனமானவர்கள் என்றும் உரையை மாற்றி மாற்றிப் பேசுவது. அமைதி வழி என்பது எதிரியுடன் வியாபாரம் செய்வது போன்றது. பாசிஸத்திற்கு வாழ்க்கைக்கான போராட்டம் என்பது இல்லை. போராடுவதற்கென்பதே வாழ்க்கை.

10. எளிய பிரிவினரை இகழ்ச்சியாகப் பார்ப்பது

மேட்டிமைத்தனம்: என்பது அனைத்துப் பிற்போக்குத் தத்துவங்களின் உள்ளார்ந்த அம்சம்.

11. எல்லோரும் சூரர்களாக (ஹீரோவாக) வேண்டும் என்று போதிப்பது

சூரத்தனம் என்பது பாசிசத்தின் அடிப்படை விதிமுறை. சூரத்தன வழிபாடு என்பது மரண வழிபாட்டுடன் கறாரான தொடர்புள்ளது.

12. அதிதீவிர ஆண்மை மற்றும் ஆயூத விளையாட்டு

“அதிதீவிர ஆண்மை என்பது பெண்கள் மீதான் கடும் வெறுப்பு; ஓரினச் சேர்க்கை போன்ற வேறுபட்ட பாலியல் முறைகளை ஏற்றுக் கொள்ளமல் கண்டிப்பது. நிரந்தரப் போரையும் சூரத்தனத்தையும் தொடர்ந்து நடத்துவது கடினம். அதனால்தான் ஊர் பாசிஸ்ட், பாலியல் விஷயங்களுக்குத் தன் மனோசக்தியைத் திருப்பிக்கொள்கிறான். ஆனால் பாலியல் ரீதியான தாக்குதல்களை தொடர்வது என்பதும் ஒரு கடினமான விளையாட்டாக இருப்பதால் கொடிய ஆயுதங்களைக் கொண்டு விளையாடுகிறான்.

13. தேவைக்கேற்ற படி மக்கள் ஆதரவு நிலை

‘எதிர்காலத்தில் தொலைக்காட்சியிலும் இணையதளத்திலும் இது நடக்கும். (இது 1995இல் எழுதப்பட்டது). ஒரு குறிப்பிட்ட பிரிவு குடிமக்களின் உணர்வுகளை ஒட்டு மொத்த மக்களின் குரலாக பிரதிநிதித்துவம் செய்வது.

14. ஊர் பாசிசம் நியூஸ்பீக் மொழி பேசுகிறது

சிக்கலான விமர்சனப்பூர்வமான பகுத்தறிவுக் கருவிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சொற்களின் வறுமையும் பாமரத்தனமான தொடக்கநிலை சொற்றடொர்களையும் அனைத்து நாஜி, பாசிச பாடப்புத்தகங்கள் பயன்படுத்துகின்றன.

 

(நீண்டதொரு கட்டுரையின் மிகச் சுருக்கமான வடிவமே இது. கருத்துக்களை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள அக்கட்டுரையைப் படிப்பது நல்லது. அதன் சுட்டி: http://www.nybooks.com/articles/1995/06/22/ur-fascism/)
 

தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

 

;