கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு
கேரளத்தைப் போல் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்திட வேண்டும். மத்திய அரசும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு செய்திட வேண்டும்.
சென்னை, மார்ச் 23- உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவிலும் கடும் பாதிப்பையும், பதற்றத்தையும் உள்ளாக்கியுள்ளது. உயிர் பயம் என்பது பொதுவாக மக்களை ஆட்கொண்டுள்ளது. இத்தோடு பொருளாதாரப் பாதிப்பு, உற்பத்திப் பாதிப்பு,வேலைவாய்ப்பு, வாங்கும் சக்திகள் குறைந்து வருவது போன்ற நிகழ்வுகளும் இணைந்த சம்பவங்களாக நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அரசும் தங்கள் நாடுகளில் நோய்களைக் கட்டுப்படுத்த பொருளாதாரப் பின்னடைவுகளை சரி செய்ய பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலும் மத்திய - மாநில அரசுகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் கோடிக்கணக்கான கிராமப்புற, நகர்ப்புற கூலித் தொழிலாளிகள் மிகப்பெரிய வேலை இழப்பையும் பொருளாதாரப் பின்னடைவையும் சந்தித்து வருகின்ற சூழ்நிலையில் இதிலிருந்து இந்த மக்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திடவில்லை. எனவே மத்திய - மாநில அரசுகள் பொருளாதார சீரழிவிலிருந்து மக்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிகப்பெரிய பாதிப்பை முதலில் சந்தித்த சீனா போன்ற நாடுகள் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளோடு உழைப்பாளிகளுக்கு வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் உறுதிப்படுத்தி அவர்களின் வாங்கும் சக்தியை பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள் என செய்திகளின் வாயிலாக அறிகிறோம். இந்தியாவில் கேரள மாநிலம் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மருத்துவ உதவியை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தி கிராமப்புற, நகர்ப்புற தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலையையும் உறுதிப்படுத்தியுள்ளது. விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தையும் சட்டக்கூலியையும் உறுதிப்படுத்தி கூடுதல் நிதியையும் மாநில அரசே ஒதுக்கீடு செய்துள்ளது.
60வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சமூகநல உதவித்திட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளது. முதியோர் பென்சனையும் உயர்த்தியுள்ளது. முதியோர் பென்சன் கிடைக்காத அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கிராமப்புற விவசாயத் தொழிலாளிகளும் ஏழை மக்கள் உள்ளனர். இவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிடக் கூடிய விதத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இல்லை. தமிழக அரசு இத்தகைய சூழ்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நூறு நாள் வேலையை வழங்கிட வேண்டாம் என உத்தரவை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வேலை மறுக்கப்படுகிறது.
அப்படியானால் 60வயதே தாண்டியவர்களுக்கு வேலையும் இல்லை, முதியோர் பென்சனும் இல்லை. அவர்களின் பிள்ளைகளோ இவர்களைப் பாதுகாத்திடும் நிலையில் இல்லை. ஏனென்றால் அவர்களும் கூலித் தொழிலாளிகளாக, வருவாய் இல்லாதவர்களாகவே உள்ளனர். இப்படிப்பட்ட ஏழைகள், 60வயதைத் தாண்டியவர்கள் எப்படி உயிர் வாழ முடியும்? கொரோனா அச்சத்திற்கு முன்பே இந்த ஏழைகள் வாழ எந்த வழியும் இல்லாமல் அதிர்ச்சியிலேயே செத்துவிடுவார்களோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகிறது. எனவே மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் இந்த கோடிக்கணக்கான உழைப்பாளிகளை நோய்ப் பாதுகாப்போடு வாழ்க்கைப் பாதுகாப்பை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டு வேலைசெய்ய தகுதியுள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேலையும் சட்டக்கூலியும் வழங்கிட உத்தரவிட வேண்டும். கேரளத்தைப் போல் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்திட வேண்டும். மத்திய அரசும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு செய்திட வேண்டும். வேலை செய்ய முடியாத 60 வயதிற்கும் மேற்பட்ட கிராமப்புற நகர்ப்புற அனைத்து வேலைகளுக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிட வேண்டும். இதை காலம் கடந்து செய்யாமல் கண்துடைப்பு நடவடிக்கையாகவும் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் இந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.