what-they-told

img

இந்நாள் ஜுன் 01 இதற்கு முன்னால்

1980 - கேபிள் டிவியில் செய்திகளை ஒளிபரப்புவதற்காக, கேபிள் நியூஸ் நெட்வொர்க் என்ற சேனல் தொடங்கப்பட்டது. இதுதான் இன்றைய சிஎன்என்! 1930களில் தொலைக்காட்சி பயன்பாட்டுக்கு வந்து, 1941இல் வணிக அடிப்படையிலான ஒளிபரப்புக்கு அமெரிக்க அரசு அனுமதியும் அளித்துவிட்டாலும், ஒளிபரப்பு சென்றடையும் தொலைவு குறைவானதாகவே இருந்தது. தொலைவில் அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளவர்கள், மிகப்பெரிய ஆண்ட்டென்னாவை நிறுவி, கிடைக்கும் வலுவிழந்த ஒளிபரப்புக்கு வலுவூட்டி(ஆம்ப்ளிஃபிக்கேஷன்), கேபிள் மூலம் சிறிய குடியிருப்புப் பகுதிகளிலுள்ள வீடுகள் அனைத்திற்கும் எடுத்துச் சென்றனர். இது கம்யூனிட்டி ஆக்சஸ்(அல்லது ஆண்ட்டென்னா) டிவி(சிஏடிவி) என்றழைக்கப்பட்டது. அதனால்தான், இன்றும் கேபிள் டிவியானது சிஏடிவி என்று குறிப்பிடப்படுகிறது. 1950களில் கேபிள் டிவி வணிகமாக மாறியது.

கூடுதல் சேனல்களைப் பார்க்கும் வகையில் தொலைக்காட்சியின் தொழில்நுட்பம் வளர்ச்சியடைய, கேபிள் டிவி நிறுவனங்கள் தாங்களே நிகழ்ச்சிகளை வழங்கும் சேனல்களைச் சேர்க்கத் தொடங்கின. அவ்வாறு செய்தி சேனல்களும் தொடங்கப்பட்டாலும், அவை குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருந்த நிலையில்தான், அமெரிக்கா முழுமைக்குமாக சிஎன்என் தொடங்கப்பட்டது. 24 மணிநேரமும் செய்திகளை வழங்கிய முதல் சேனலும் இதுதான். எல்லா புதிய தொழில்நுட்பங்களும் உருவானவுடனேயே வணிகப்படுத்தப்பட்ட அமெரிக்காவில், வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்புகள் எல்லாம் தனியாரால் மட்டுமே செய்யப்படுகின்றன. வணிக நோக்கில்லாத வானொலி, தொலைக்காட்சி சேவைகள்கூட, லாப நோக்கில்லாத அறக்கட்டளை, சங்கம் போன்ற அமைப்புகளால் மட்டுமே நடத்தப்படுகின்றன. எனவே, செய்தியும் தனியார் சேவையாகவே இருந்து வருகிறது.

ஏற்கெனவே, கட்டணம் பெற்றுக்கொண்டு கேபிள் டிவி சேவையை வழங்கிய நிறுவனங்களே, தாங்களே தயாரித்த நிகழ்ச்சிகளையும், செய்தியையும் ஒளிபரப்பத் தொடங்கியதே, பிற்கா லத்தில், கேபிள் இல்லாத ஒளிபரப்பு சாத்தியமானபோதும், கட்டணச் சேனல்கள் உருவாக அடிப்படையாக அமைந்தது. வணிக அடிப்படையிலான செயற்கைக்கோள்களைச் செலுத்துவது எளிமையானதும், சிறிய ஆண்ட்டென்னாக்களை வீடுகளில் பொருத்தி, கேபிள் இல்லாமலேயே நேரடியாக ஒளிபரப்பைப் பெறமுடிந்தது. கணினிசார் தொழில்நுட்பங்களின் மேம்பாட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்களை மட்டும் அளிக்க முடிந்தது. அதே கணினிசார் தொழில்நுட்பங்களுடன், இணையம் இணைந்து நிகழ்ச்சிகளையே தேர்ந்தெடுக்கும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் வசதிகளை உருவாக்கியது. இவற்றை, மொபைல் ஃபோன்கள் அனைவருக்கும் எடுத்துச்சென்றதும், கேபிள் மட்டுமின்றி தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கே நெருக்கடிகள் தொடங்கிவிட்டன.