what-they-told

img

கற்பனைக் கடிதம்- மகாத்மாவே இந்தியாவில் சித்தாந்த போர் உக்கிரமாய்! அந்தியூர் ஆர்.முருகேசன்

உலகம் ஒருபோதும் மறக்கமுடியாத மகத்தான புகழுக்குரிய மகாத்மாவே உங்களுக்கு எங்கள் வணக்கம்...! இந்துத்துவ மதவெறியன் ஒருவனின் துப்பாக்கி குண்டுகள் உங்கள் உயிரை பறித்த காரணத்தால் இந்திய மண்ணில் இருந்து நீங்கள் பிரிந்து 72 ஆண்டுகள் ஆகிறது. நீங்கள் உயிருடன் இருந்த காலத்தில் எது நடக்கக்கூடாது என்று நடையாய் நடந்து, பட்டினியாய் கிடந்து பரிதவித்தீரோ அது நாட்டில் பகட்டுடன் நடைபோடும் காலத்தில் தற்போது நாங்கள் இருக்கிறோம். இப்போது நாட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளை என் அறிவுக்கு எட்டியவரையில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கடந்தாண்டு (2019) ஆகஸ்ட் மாதம் 03ஆம் தேதி நீங்கள் எல்லாம் இருந்துகூட ஒருமுறைக்கு பலமுறை அமர்ந்து பேசி உருவாக்கப்பட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க காஷ்மீரத்து சிறப்பு அந்தஸ்த்து என்பது, அந்த வரலாற்று நிகழ்வில் இம்மியளவும் சம்பந்தமில்லாத வகையறாவைச்சார்ந்தவர்களால் நடத்தப்படும் இப்போதைய மத்திய அரசின் ஒரே ஒரு உத்தரவில் சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டது. தற்போது அழகிய காஷ்மீர் ரோஜா உதிர்ந்தது போல் காட்சியளிக்கிறது. ஆண்டுகள் பல கடந்தும் நீதிமன்றத்தில் இழுவையாய் நிலுவையில் இருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டாகிவிட்டது. ஆனால் நீதி மறுக்கப்பட்டுள்ளது என நாட்டு மக்கள் வெளிப்படையாக பேசிக்கொள்வதை கேட்கமுடிகிறது. தங்கள் பாதங்கள் பரிகாசமாய் பயணித்த நம் தேசமான உலகில் மதச்சார்பின்மையின் மணிமகுடமாய்த் திகழும் இந்தியாவில், தற்போது ஆளும் ஒரு அரசே தம் மக்களை மதரீதியாக பிரிக்கும் படுபாதகச் செயலில் இறங்கியுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு என பல அழிவு பாணங்களை நாட்டு மக்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக ஏவ தயாராகிவிட்டது.  ‘‘குரூர சிந்தனையுடன் தேசியவெறியை மக்கள் மனங்களில் கிளறிவிட்டு, நாட்டு மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருந்தால்தான் பாசிச முதலாளித்துவ வலதுசாரி சிந்தாந்தத்தை நிறைவேற்ற முடியும் என்ற கொடுங்கோலன் அடால்ப் ஹிட்லரின் சித்தாந்தத்தை வேதவாக்காக கொண்டுள்ளவர்கள் வேறு எப்படி செய்வார்கள்’’ என நீங்கள் எங்களை கேட்கவும் வாய்ப்புள்ளது என்பதை அறிந்தே உள்ளோம். சமகாலத்தில் உங்களுடன் பயணித்து சிலநேரங்களில் கருத்து வேறுபட்டு கடைசியாக காங்கிரசையே விட்டு முற்போக்கு திராவிடக் கொள்கையில் பற்றுகொண்டு பெரியார் என்ற பெயருடன் இறந்தபின்பும் இன்றும் உங்களைப்போன்றே வாழ்ந்து வரும் பெரியாரும் பாசிச சிந்தனையாளர்களின் விசச்சொற்களின் தாக்குதலுக்கு தொடர்ந்து ஆளாகிறார். இது பாசிச மதவெறி முதலா ளித்துவ வலதுசாரி சித்தாந்தமும், மதச்சார்பற்ற இடதுசாரி முற்போக்கு தொழிலாளிவர்க்க சித்தாந்தமும் நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் ஒரு காலமும்கூட ஆகும். இடதுசாரிகளுக்கு ஆதரவாக திராவிட முற்போக்கு சிந்தனையாளர்கள் பிரச்சனை அடிப்படையில் கைகோர்ப்பதும் ஒரு நல்ல நிகழ்வாக நடந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. உங்கள் கொள்ளுப்பேரன்களான மாணவர்களும், இளைஞர்களும், இஸ்லாமிய சகோதர சகோதரிகளும், அவர்களோடு சேர்ந்து இந்து, சீக்கிய மக்களும் வடநாட்டில் நாட்டை பிளவுபடுத்தும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யை ஏற்க மாட்டோம் என போர்பறை முழங்குவது உங்கள் காதுகளுக்கு எட்டியிருக்கும் என நினைக்கிறோம். தென்கோடியில் கேரளத்தில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் இணைந்து மத்திய அரசின் மதவெறி சட்டத்திற்கு எதிராக ஒற்றுமை குரல் ஒலிக்கிறது. தமிழகத்தில் திராவிடமும், பொதுவுடைமையும், அம்பேத்கரியமும் ஒன்றாக கைகோர்த்து மதவெறி சட்டத்திற்கு எதிராக மக்களிடம் களத்தில் நிற்கின்றன. ஆந்திரா, மேற்குவங்காளம், பஞ்சாப், அஸ்ஸாம் என பல மாநில முதல்வர்கள் மத்திய அரசின் குடி  மக்கள் பதிவேடு என்ற நாட்டு மக்களின் குடியைக்கெடுக்  கும் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறுவதும், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள்கூட பம்முவதையும் பார்க்க சந்தோசமாக உள்ளது. இருப்பினும் உங்களையே கொன்றவர்களின் சித்தாந்தமும், அதன் எதிர்நிலை சித்தாந்தமும் நேருக்கு நேர் நின்று முட்டி மோதும் சித்தாந்த போர் இந்தியாவில் உக்கிரமாகியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த போரில் உலகில் பாசிசத்தை வீழ்த்த படைதிரட்டிய சோவியத் செஞ்சேனையின் வாரிசுகளான கம்யூனிஸ்டுகளே இங்கும் முன்னணி படைவரிசையில் நிற்கிறோம். எங்கள் சித்தாந்த மனபலத்தை மேலும் பலமடங்கு கூட்டிக்கொள்ள சபதமேற்றுள்ளோம் என்ற செய்தியைச் உரக்கச் சொல்லவே இந்த அன்புமடலை உங்களுக்கு எழுதினோம். நன்றி.! இப்படிக்கு, இந்திய சமத்துவன்

;