கோவிட் 19 வைரஸின் பாதிப்புகளை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் உக்கிரமாமன போராட்டத்தை நடத்தி வருகின்றன. மருத்துவ கட்டமைப்புகள் மக்கள் சார்ந்து இருக்கும் தேசங்களில் இந்த வைரஸ் முழுமையாக வீழ்த்தப்படவில்லை என்றாலும் பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சீனா, கியூபா போன்ற சோசலிச தேசங்கள் மட்டுமல்லாது தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற தேசங்களும் அடங்கும். மருத்துவ வசதிகள் முற்றிலும் தனியார் கைகளில் உள்ள அமெரிக்கா உட்பட பல தேசங்கள் பெரும் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. எனினும் அனைத்து தேசங்களும் ஒரே மாதிரியான அணுகுமுறையை உருவாக்கவில்லை. சில தேசங்கள் ஊரடங்கு மட்டுயுமே நம்பியிருக்கின்றன. சில தேசங்கள் ஊரடங்கை அமல்படுத்தாமல் பரிசோதனைகளை பெருமளவு முன்னெடுக்கின்றன. இந்த இரண்டு அணுகுமுறைகள் என்ன தாக்கத்தை உருவாக்கியுள்ளன? மார்ச் 30ம் தேதிய இந்து ஆங்கில இதழ் வெளியிட்ட சில விவரங்களை பார்ப்போம்.
குறைவான மருத்துவ பரிசோதனைகள் / அதிகமான பாதிப்புகள் |
பிரான்சு, இந்தோனேஷியா, ருமேனியா |
அதிகமான மருத்துவ பரிசோதனைகள் / அதிகமான பாதிப்புகள் |
அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஐஸ்லாந்து |
குறைவான மருத்துவ பரிசோதனைகள் / குறைவான பாதிப்புகள் |
ஜப்பான், இந்தியா,சவூதி அரேபியா, பெரு |
அதிகமான மருத்துவ பரிசோதனைகள் / குறைவான பாதிப்புகள் |
பின்லாந்து, கத்தார், தென் கொரியா, ஆஸ்திரேலியா. |
வைரஸை தனிமைப்படுத்தும் அணுகுமுறைகள் ஒரே மாதிரியாக இல்லை. அதே போல அதன் தாக்கமும் அனுபவமும் கூட ஒரே மாதிரியாக இல்லை. ஊரடங்கு அமலாக்கிய தேசங்களில் கூட வைரஸ் பாதிப்புகள் குறையவில்லை; மாறாக அதிகரித்துள்ளன.
சிலவிவரங்கள்:
தேசம் | ஊரடங்கு அமலாக்கிய அன்று இருந்த பாதிப்புகள் | மார்ச்31 காலை 10.30 மணி நிலவரப்படி பாதிப்புகள் |
இந்தியா | 624 | 1,251 |
பெல்ஜியம் | 1,243 | 11,900 |
பிரான்ஸ் | 6,633 | 44,550 |
இங்கிலாந்து | 8,077 | 22,141 |
இத்தாலி | 0,149 | 1,01,739 |
ஊரடங்கு அமலாக்கப்பட்டாலும் பின்னர் பரிசோதனை அதிகரித்த பொழுது பாதிப்புகளும் அதிகரித்தன என்பதே பல தேசங்களின் அனுபவம் ஆகும். ஊரடங்கு அவசியம் தேவை; ஆனால் அது மட்டுமே போதுமானது அல்ல. மருத்துவ பரிசோதனைகள் நடத்தும் தேசங்களில் மிகவும் குறைவாக நடப்பது இந்தியாவில்தான் என பல புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் சரியாக திட்டமிடல் இல்லாத காரணத்தால் அன்றாடம் உழைத்து பிழைக்கும் உழைப்பாளிகளும் முறைசாரா இடம் பெயரும் தொழிலாளர்களும் எத்தகைய வேதனைகளை சந்தித்தனர் என்பதை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்தது. அவர்களின் பொருளாதார பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை எனில் தேசத்தின் மருத்துவ பாதுகாப்பும் மிகப்பெரிய கேள்வி குறியாகிவிடும். ஊரடங்கு மட்டுமே போதுமானது என இருந்துவிடாமல் மருத்துவ பரிசோதனைகள் பன்மடங்கு அதிகரிப்பதும் உழைப்பாளிகளுக்கு பொருளாதார பாதுகாப்பு செய்து கொடுப்பதும் மத்திய மாநில அரசாங்கங்களின் முன்னுரிமை கடமை ஆகும். ஆனால் கேரளா போன்ற சில மாநில அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகள் கூட மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை! “நல்லது நடக்கும் என நம்புவோம்; ஆனால் மோசமான சூழலுக்கு தயார்ப்படுத்தி கொள்வோம்” என்பதே இந்தியாவின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். -அ.அன்வர் உசேன்