what-they-told

img

இதயமற்ற உலகின் இதயமாக - ச.சரண்

இந்தியா அன்றாடங்காய்ச்சிகளின்  தேசம். அன்றாடம் உழைப்பு அதன் மூலமே பிழைப்பு என்ற விதியினில் தான்  90 சதம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு, அவர்களது வயிறடங்க வழி சொல்லவில்லை.  இந்திய தேசத்தின் புரட்சிகர இளைஞர் அமைப்பாக செயல்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இத்தகைய நெருக்கடி நிலையில் மக்களுக்கு சேவை செய்வதும் அரசியல் நடவடிக்கையின் ஒரு பணி என்பதை உணர்ந்து செயல்படுகிறது.

குடும்ப அட்டைக்கு ரூபாய் 1000 உதவி தொகை என்ற அரசு அறிவிப்பு போதுமானதாக இல்லை. கோழி  கூட கொத்த  யோசிக்கும் புழு பூத்த  அரிசி தான் வள்ளல் கரம் கொண்ட ஆட்சியாளர்களால் கொடுக்கப்பட்டது.

மதுரை மாநகரில் வாலிபர் சங்கம் சார்பாக சில ரேஷன் கடைகளில் அளவு சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தோம். புளுத்த அரசியின் எடையை சரிபார்க்க மனம் கனத்தது. அதையும் வாங்கி தலையில் சுமந்து கொண்டு, ‘உங்களுக்கு அரிசி தேவை இல்லைனா என்கிட்ட கொடுங்க’ என்று பக்கத்து வீட்டுக்கார சகோதரி  சொல்லும் பொழுது அவர்கள் தலையில் இருந்த கனத்தை எங்கள் இதயம் சுமந்து நின்றது. 

தினசரி ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கடந்து செல்கிறோம். நாம்   சற்றும் கவனிக்காத மனிதர்களை இந்த ஊரடங்கு தான் அடையாளம் காட்டியது. யார், யார் இந்த ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆழ்ந்து சிந்தித்தும்  நம் சிந்தனைக்குள் வந்து சேராதவர்கள் இருக்கவே செய்தார்கள்.

எத்தனையோ சிக்னலில் சிவப்புக்கும்  பச்சைக்கும் இடையில் உள்ள நொடிகளில் பேனாக்களையும்,  ஊதுபத்திகளையும், கீ செயின்களையும்,  விற்கும் மனிதர்களை  பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து மறந்து போயினோம்.....  

விசேஷ வீடுகளில் பந்தியில் எச்சில் இலை எடுக்கும் தாய்மார்களை பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து மறந்து போயினோம்........

இறப்பு வீடுகளில் சங்கு ஊதும் பெருமகனை  பாதிக்கப்பட்ட பட்டியலில் இருந்து  மறந்து போயினோம்....... 

பள்ளிக்கூட வாசலில் கொய்யா பழம்,  நெல்லிக்காய், முறுக்கு,  சீடை விற்கும்  பாட்டிகளை பாதிக்கப்படும் பட்டியலிலிருந்து மறந்து போயினோம்......... 

பேருந்துகள்,  கடைகள் என  ஆசீர்வாதம் செய்துவிட்டு காசு வாங்கும் திருநங்கைகளை மறந்து போயினோம்....... 

வடைக் கடை,  பூக் கடை ,  பழக் கடை என  சாலையோர வியாபாரிகளை மறந்து போயினோம்....... 

பானிபூரி விற்கும் வட மாநில  தொழிலாளர்களை மறந்து போயினோம்...... 

இப்படி  நம் பார்வையில் படாத எத்தனையோ பேர்  அவர்கள் உணவிற்கு  என்ன செய்வார்கள் என்ற சிந்தனை சிறிதளவும் வரவில்லை, அவர்களது வீட்டு வாசலில் நாங்கள் சென்று நிற்கும் வரை!

மதுரை மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர்,  தினமும் 300 பேருக்கு சாப்பாடு போட்டார் என்று சொன்னார். வாலிபர் சங்கம்  தோழர்கள் களத்தில் இறங்கினோம். முதல் நாள் சமையல் தயாரானது. உணவு தயாரான இடத்திலேயே மக்கள் வந்து வாங்கிச் சென்றார்கள்.  ஏதோ மனம்  நெருடலாக இருந்தது.   மறுநாள் உணவுக்கான பொருட்களை தயார் செய்துவிட்டு மாலையில் வீதியில் இறங்கினோம். தெருக்கள் எங்கும்  நிறைந்து இருந்தார்கள் அந்த பட்டினி மனிதர்கள்,  மாற்றுத்திறனாளிகள், கைவிடப்பட்ட முதியவர்கள், திருநங்கைகள், தகப்பனை இழந்த பிள்ளைகள் நோய் காரணமாக யாரும் வீடு வாடகைக்கு தர மறுத்ததால் சாலையோரமாய் வாழ்ந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் திரிந்த  மனிதர்கள்.... என கணக்கெடுத்தோம்.

 150க்கும் மேற்பட்ட குடும்பம் 500க்கும் மேற்பட்ட மக்கள் பட்டியலில் நிறைந்தார்கள்.  வீதி சுற்றுவதை நிறுத்தினோம். எங்கள் தோள்பட்டை சுமக்க வேண்டிய  சுமை இதுதான் என்று முடிவுக்கு வந்தோம். இன்னும் எத்தனை வீதிகளோ...... எத்தனை மனிதர்களோ....... தெரியவில்லை. பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி வருகிறோம்.

வாலிபர் சங்கம் தோழர்களின் இந்த பணிகளை பார்த்து தாமாக முன்வந்து அருகில் உள்ள மக்கள்  அரிசி வாங்கி தந்தனர். காய்கறி மார்க்கெட்டில் சுமைதூக்கும் வேலை பார்க்கும் தோழர்கள் தினமும் தேவையான காய்கறி கொண்டுவந்து தந்தனர். மாலை நேரத்தில் உதவி கேட்டு வாய்ப்பு உள்ளவர்களை சந்தித்து நிதி உதவி கேட்கிறோம். தங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருப்பவர்களிடம் வாலிபர் சங்க கிளை தோழர்கள் நிதி திரட்டி தருகின்றனர். தினமும் 5000 ரூபாய் தேவையினை  அனைவரும் சேர்ந்து திரட்டுகிறோம்.

25 க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்  தோழர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். சங்கத்தின் புலித்தேவன் கிளைத் தோழர் அன்வர் வீட்டில் சமையல் நடைபெறுகிறது. சத்தியமூர்த்தி கிளை நிர்வாகி தோழர் ராஜ்  அவர்களின் தந்தை சமைத்து தருகிறார்.  சமையல் நடைபெறும் காம்பவுண்ட்  வீடுகளில் உள்ள பெண்கள் உதவிக்கு  வந்து விடுகிறார்கள். வேலைகளை பிரித்து கொண்டு  முகம் சுளிக்காமல் வேலை பார்க்கிறார்கள்.

 நாங்கள் கொண்டுவரும் உணவுக்காக காத்திருக்கிறார்கள் அந்த எளிய மனிதர்கள்.  எங்களிடம்  உணவு வாங்கும் பாட்டி எங்கள் கரங்களைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விடுகிறார். ஏ அரசே  நீ இருக்கிறாயா?  என்ற கேள்வியோடு. அந்த கண்ணீர் எங்கள் கரங்களை நனைத்துக் கொண்டிருக்கிறது... 

மதுரை மாநகரில் 30 க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத் தோழர்கள் தங்களை தன்னார்வலராக பதிவு செய்து மதுரை வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாம் உதவிகள் கேட்டு  குரல் வருகிறதோ  அங்கெல்லாம் பயணிக்கிறார்கள். 

சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு அரசு மருத்துவமனை மாதந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்குகிறது. ஊரடங்கு காலத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தாலும் சுகாதார நிலையங்களில் மருந்து வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் கையெழுத்து பெற்று அனுமதி வாங்கி வந்தால் தான் மாத்திரை தர முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு மாத்திரைகளும் இருப்பு இல்லாத நிலையே இருந்தது. அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் மக்களையும் காவல்துறை தடி எடுத்து அடித்து விரட்டியது. இந்த சூழலில் வாலிபர் சங்கத்  தோழர்கள் 50க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளனர். வெளி மாவட்ட மக்களுக்கும் மருந்துகள் வாங்கி அனுப்பி வைத்தனர்.

நாட்டுப்புற கலைஞர்களையும் பறை இசைக் கலைஞர்களையும் திருநங்கைகளையும் கூடுதலாக கழுத்தை நெறித்து உள்ளது. ஊரடங்கு தன்னை மறந்து ஊருக்காக கலையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய  சூழலில் இதுவரை 220 குடும்பங்களுக்கு  தேவையான 1500 கிலோ அரிசி மற்றும்  மளிகை  பொருட்களை வழங்கி உதவி செய்தது வாலிபர் சங்கம்.

பொதுவாக சாதாரண காலங்களில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் அவசர கால சிகிச்சைகளுக்கு ரத்த தேவை கொடையாளர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும். ஊரடங்கு காலங்களில் ரத்த கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளானது. இதனால்  அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கும், பிரசவ காலத்தில் ரத்தம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கும், ரத்தம் கிடைக்காமல் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழலை சரி செய்ய 50 க்கும் மேற்பட்ட வாலிபர் சங்க இளைஞர்கள் குருதிக் கொடை செய்துவருகின்றனர். வீரத்தாய் தியாகி லீலாவதியின் நினைவு தினமான ஏப்ரல் 23 அன்று அனைத்துப் பகுதிகளிலும் இருந்து 75க்கும்மேற்பட்ட இளைஞர்கள் இரத்ததானம் செய்தனர்.

மதுரை மாநகரில் 50 வார்டுகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டும், நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுர குடிநீர் வழங்கியும் நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாலிபர் சங்கத் தோழர்கள் இந்த பணிகளில் இளம்பெண் தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். 

உதவிகள் செய்யும் வாய்ப்புகள்  பெற்ற நல்ல உள்ளங்களை அக்கரையிலும்,  ஒட்டிய வயி வாழ்வாதாரத்தை இழந்த சாமானியர்களை இக்கரையிலும் நிறுத்தி வைத்துள்ளது ஊரடங்கு. இவர்களுக்கு பாலமாக வாலிபர் சங்கம் மாறியது.

தமிழகத்தின்  பிற பகுதிகளிலும் வாலிபர் சங்கத் தோழர்களின் பணி மகத்தானது. சுனாமி வந்தாலும்   பெரு வெள்ளம் வந்தாலும் ஒக்கி,  கஜா என  புயல்கள் தாக்கினாலும் களத்தில் நிறைந்து உள்ளனர் இளைஞர்கள்.. ஏனெனில் அவர்கள்  இந்த  சமூகத்தையும்  மக்களை யும்  நேசிக்கிறார்கள்.இதயமற்ற உலகின் இதயமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்றும் களப் பணியில் நிற்கிறது.