1765 - இந்தியாவின் ஆட்சியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் நுழைவைத் தொடங்கிவைத்த, அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. முகலாயப் பேரரசர் இரண்டாம் ஆலம் ஷா, வங்காள நவாப் மீர் காசிம், அவாத்-தின் நவாப் ஷுஜா-உத்-தவ்லா ஆகியோரின் கூட்டணிப் படையை, 1764 அக்டோபரில் நடைபெற்ற பக்சார் சண்டையில் கம்பெனிப் படை தோற்கடித்ததையடுத்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. கூட்டணியின் படையில் சுமார் 40 ஆயிரம் வீரர்களும், 140 பீரங்கிகளும் இருந்தாலும், வெறும் 7 ஆயிரம் பேரையும், 30 பீரங்கிகளையும்கொண்ட கம்பெனிப் படை வெற்றிபெற்றது. கம்பெனிப் படையின் 7 ஆயிரம் வீரர்களிலும், சுமார் 6,200 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படைகளின் கூட்டணியாக அமைந்த இந்தியப் படையில் ஒருங்கிணைப்பு இல்லாமற்போனது தோல்விக்குக் காரணமாக அமைந்தது. வங்காளம், பீகார், ஒரிசா ஆகியவை அடங்கிய கிழக்குப் பகுதியில், முகலாயப் பேரரசரின் உத்தரவின்றி வரி வசூலிக்கும் அதிகாரத்தை இந்த ஒப்பந்தம் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கியது. அதற்கு பதிலாக, முகலாயப் பேரரசின் அலகாபாத் அரண்மனை செலவுகளுக்காக, (அவ்வாறு வசூலித்துக்கொண்ட வரியிலிருந்து!) ஆண்டுக்கு ரூ.26 லட்சம் (அன்றைய மதிப்பிலேயே) ஆலம் ஷாவுக்கு கம்பெனி செலுத்தும். வாரணாசியை தன்னிடம் வைத்துக்கொண்டு, கம்பெனி கேட்கும் தொகையை (கப்பம்!) ஆலம் ஷா செலுத்தவேண்டும். அலகாபாத்தையும், கோராவையும் ஷுஜா-உத்-தவ்லாவிடமிருந்து பிடுங்கி முகலாயப் பேரரசிடம் வழங்கிவிட்டு, அவாத்-தை அவருக்குத் திருப்பித் தந்தது கம்பெனி. அவர், கம்பெனிக்குப் போர் இழப்பீடாக ரூ.53 லட்சம் தரவேண்டும். வங்கத்திலும் வரி வசூல் உரிமைகளை கம்பெனி எடுத்துக்கொண்டு, நீதி முதலான அதிகாரங்களை மட்டும் கொண்டவராக நவாபை ஆக்கி, இரட்டை அரசை ஏற்படுத்தியது. போரில் கம்பெனி வென்றிருந்த நிலையில், அவர்கள் விரும்பியவற்றைத் திணித்த இந்த ஒப்பந்தத்தில், கம்பெனியின் பிரதிநிதியாக ராபர்ட் கிளைவ் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தமே, அதுவரை இந்தியாவில் மிகப்பெரிய வணிக நிறுவனமாக மட்டுமே இருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு, 40 ஆயிரம் ச.கி.மீ.க்கும் அதிகமான விவசாய வளமிக்க பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையை அளித்து, அதனை இந்தியாவின் அரசு நிர்வாகத்தில் பங்கேற்கும் அமைப்பாக மாற்றியது.