what-they-told

பழைய சொல், புதிய தேடல் ‘மதலை’ - அண்டனூர் சுரா

பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். ‘மிகச் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார்’ எனப் பதிவிட்ட அப்பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தையை தன் மடியில் வைத்துக் கொஞ்சுவதும், விளையாடுவதுமாக இருந்தார். கடுமையான முகத்துடன் இருக்கும் மோடி, இந்தப் புகைப்படங்களில் மிக மகிழ்ச்சியாகத் தெரிந்தார்.  இதுபோன்று கவனத்திற்குள்ளாகும் குழந்தைகளுக்கு மொழியியல் சூட்டும் பெயர்கள் என்ன? சீனப் புரட்சியின் போது ‘லீ ‘யின் தந்தையை தேசியப் படையினர் கொன்றுவிட, லீ தாயிடம் வளர்கிறார். இவ்வாறு தந்தையற்ற குழந்தை ‘கைம்பெண் குழந்தைகள் (faderleas baby)’ என அழைக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் தாயில்லா குழந்தை - ‘பிறப்பு விரும்பாக் குழந்தை’. ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகத்தில் கிளாடியஸ், ஹேம்லட்டின் தந்தை யைக் கொன்றுவிட அவன் தந்தையில்லாமல், தாய் யாரென்றும் தெரியாமல் வழிப்போக்க னால் எடுத்து வளர்க்கப்படுகிறான் - இவன் ‘தத்துப்பிள்ளை( Toddler baby)’. திருமணமாகாமல் பிறக்கும் குழந்தை ‘ஊற்றுக்குழந்தை (Lebensborn baby)’. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹிட்லர் நாஜீ படைகளைப் பெருக்க இவ்வகை குழந்தைகளை ஆதரித்தார். தாய், தந்தை இருவருமற்றக் குழந்தை - ‘அனாதைக் குழந்தை (Orphan baby)’. தேசமற்ற அகதிக் குழந்தைகள் - ‘மிதக்கும் குழந்தை (Float baby)’. ஒரு தேசத்தின் அதிபரின் குழந்தை - ‘தலைக்குழந்தை (first baby)’. மகாராணி, இளவரசிகளுக்குப் பிறக்கும் குழந்தை - அகப்பைக் குழந்தை (Silver Spoon baby). கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் இந்தியாவிற்கு வருகை தருகையில் ட்ரூடோவின் மகனுடன் மோடி கைக்குலுக்கினார். இக்குழந்தை ‘எஜமான் குழந்தை (Boss baby)’. பிரபலமானவர்களின் புகைப்படக் குழந்தை - ‘முன்னோடிக் குழந்தை’ (Poineer baby) என அடையாளப்படுத்தப்படுகிறது. உதாரணம் ஆபிரகாம் லிங்கனின் குழந்தைப் புகைப்படம். யாரையும் வசீகரிக்கும் குழந்தை - ‘எடுப்பார் கைப்பிள்ளை’. உதாரணம் குழந்தை இயேசு, முருகன். ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே தலைவர் என்கிற கொள்கையைக் கொண்ட அடால்ப்  ஹிட்லர், உஸ்சி ஸ்க்னெய்டர் என்கிற பெண் குழந்தையைக் கொஞ்சியக் காட்சியை Galerie Bilderwelt என்கிற நிறுவனம் புகைப்படம் எடுத்து வெளியிட்டது. இக்குழந்தை ஹெர்டா ஸ்க்னெய்டரின் மகளாவார். ஹிட்லரைக் கவர்ந்த இக்குழந்தையை ஆங்கில பத்திரிகை ‘the Fuhrer’s child’ என எழுதியது.  Fuhrer என்பது ஜெர்மன் சொல். இதற்கு மன்னன், சர்வதிகாரி, வழிகாட்டி என்பதாகப்  பொருள் கொள்ளலாம். இத்தகையவர்களின் அன்பைப் பெறும் குழந்தைகளை தமிழில்  என்னப் பெயரிட்டு அழைக்கலாம்....? குழந்தை என்பதற்கு மழலை, குழவி, பிள்ளை, மதலை, மகன், மகவு, சிசு எனப் பலப் பெயருண்டு. ஆங்கிலத்தில் child, baby, infant. மதலை - குழந்தையைக் குறிக்கும் தனித்த தமிழ் இலக்கியச் சொல். கம்பராமாய ணத்தில், இந்திரசித்தன் மதலை என அழைக்கப்படுகிறான். இங்கு மதலை என்பது ‘சிறுபிள்ளை’. ‘வாதுகள் பேசிடு மாந்தர் குரலும் மதலை யழுங் குரலும்’ (பாரதியார் - தனிப்பாடல்). ‘மதலை மாடமும் வாயிலும்’ என்கிறது மணிமேகலை. இங்கு மதலை - தூண். ‘தசரதன் மதலை அரக்கனை அடுபழிஒழிப்பான்’ (இராமநாதேச்சரம் தல பதிகம்). இங்கு மதலை - மகன். மதலை என்பதற்கு கொன்றை மரம், மகன், மரக்கலம், கொடுங்கை, தூண் என்ப தாக சூடாமணி நிகண்டு பொருள் தருகிறது. மதலை - குழந்தை (பிங்கல நிகண்டு). திருக்குறளில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. பேரா.எஸ்.வையாபுரிபிள்ளை ‘மணிச்சுடர்  மணிகள்’ என்கிற நூலில் மதலை என்பது ஆரிய சொல் என்கிறார். இதை செந்தமிழ்ச்செம்  மல் பேரா.சி.இலக்குவனார் மறுத்து மதலை தூய தமிழ்ச்சொல் என்கிறார். ‘முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை’. இக்குறளில் மதலை என்பது துணைவன், நண்பன், தூணைப்போன்று தாங்கும் நண்பன் என்கிற பொருளைத் தருகிறது .  பிரதமர் மோடி வைத்திருக்கும் குழந்தை, முன்னாள் மத்திய அமைச்சரும், இன்றைய மாநிலங்களவை உறுப்பினருமான சத்தியநாராயணன் ஜாதியாவின் பேரக்குழந்தை. பெரிய இடத்து குழந்தை என்பதாலும் மோடி அக்குழந்தையை ‘நண்பர்’ என அழைத்ததாலும் ‘மதலை‘ என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.