what-they-told

img

இந்நாள் டிச. 02 இதற்கு முன்னால்

1851  - மீண்டும் குடியரசின் தலைவர் பதவிக்குப் போட்டியி டுதற்கான சட்டத்திருத்தத்திற்குப் போது மான ஆதரவு கிடைக்காததால், சுய ஆட்சிக் கவிழ்ப்பின்மூலம் பிரான்சின் இரண்டாவது குடியரசை முடிவுக்குக் கொண்டுவந்தார் மூன்றாம் நெப்போலியன். இவர் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் தம்பி மகன். நெப்போலியனின் மனைவியான பேரரசி ஜோசஃபினின், முதல் கணவருக்குப் பிறந்த மகள்தான் இவரின் தாய்! நெப்போலியன் மூலமாக ஜோசஃபினுக்குக் குழந்தையில்லாததால் ஜோசஃபினை விவாகரத்து செய்துவிட்டு, ஆஸ்திரியாயவின் மேரி லூயியைத் திருமணம் செய்தது, அவர்களுக்குப் பிறந்த மகனை இரண்டாம் நெப்போலியன் என்று அறிவித்தது, அவர் 21 வயதில் இறந்தது ஆகியவை இத்தொடரின் 2019 ஏப்ரல் 4இல் இடம்பெற்றுள்ளன. அதனால்தான் இந்த சார்லஸ் லூயி நெப்போலியன் போனபர்ட் மூன்றாம் நெப்போலியன் ஆனார். நெப்போ லியனை வீழ்த்திய கூட்டணி நாடுகள், போர்பன் மரபின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி யிருந்தன. இதனை அகற்ற 1830இல் நடைபெற்ற ஜூலைப் புரட்சி, ஆர்லியன்ஸ் மரபின் அரசியல் சட்ட முடியாட்சியை ஏற்படுத்தியிருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப்பின் ரோமிலும், பின்னர் தாயுடன் ஸ்விட்சர்லாந்திலும் வசித்த இவர், ஸ்விஸ் ராணுவத்தில் சேர்ந்து, நெப்போலியனைப்போல பீரங்கிப்படையில் அலு வலரானார்.  சிறையிலிருந்து தப்பிவந்த நெப்போலியனுக்கு மக்கள் திரண்டுவந்து ஆதர வளித்து நூறு நாள் ஆட்சி நடந்ததைப்போன்று தன்னையும் மக்கள் வரவேற்பார்கள் என்று கற்பனைசெய்துகொண்ட இவர், 1836இலும், 1840இலும் இருமுறை பிரெஞ்ச் ஆட்சியைக் கவிழ்க்க முயன்று, தோற்று, ஒருமுறை சிறையிலும் அடைக்கப்பட்டுத் தப்பிச்சென்று லண்டனில் வசிக்கவும் தொடங்கிவிட்டார். இரண்டாவது குடியரசை ஏற்படுத்திய 1848 புரட்சியின்போதுகூட லண்டனில் இருந்த இவர், அதன் முதல் பிரதிநிதிகள் தேர்தலிலும் பங்கேற்கவில்லை. ஆனால், தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, 74.2 சதவீத வாக்குகள் பெற்று வென்றதுடன், தன்னை இளவரசர்-குடியரசுத்தலைவர் என்று அழைத்துக்கொண்ட இவர், இரண்டாவதுமுறை தேர்தலில் பங்கேற்பதற்கான சட்டத்திருத்தம் தோல்வியுற்ற நிலையில், நெப்போலியன் பேரரசராக முடிசூட்டிக்கொண்ட டிசம்பர் 2ஐத் தேர்ந்தெடுத்து, அந்நாளில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அடுத்த ஆண்டின் அதே நாளில் நெப்போலியனைப்போன்றே தனக்குத்தானே பேரரசராக முடியும் சூட்டிக்கொண்டார்.