what-they-told

img

நீட் தேர்வில் 3ஆவது முறையாக தோல்வி: விரக்தியில் சென்னை மாணவி தற்கொலை

சென்னை, செப்.8- தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வு முடிவு செப்.7 அன்று இரவு வெளியான நிலையில் சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலை சேர்ந்த ஆசிரியையின் மகள் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து இருப்பது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமுல்லைவாயலை அடுத்த சோழபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் அமுதா. இவர் ஆவடி அருகே பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் லஷ்ணா ஸ்வேதா (19). கடந்த 2020 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு முடித்திருந்தார். இவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் கல்வி நிறுவனத்தில்  2 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்திருக்கிறார். இருப்பினும் அதிக மதிப்பெண் பெற்று இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க விரும்பிய அவர், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று மூன்றாவது முறையாக தேர்வு எழுதினார்.  எப்படியும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் லஷ்ணா ஸ்வேதா தற்போதும் தேர்ச்சி பெறவில்லை. 3-வது முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் லஷ்ணா ஸ்வேதா மிகவும் மனம் உடைந்தார்.

இதையடுத்து மகள் லஷ்ணா ஸ்வேதாவுக்கு அமுதா ஆறுதல் கூறினார். அடுத்த நீட் தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தினார். எனினும் நீட் தேர்வு தோல்வியால் மாணவி லஷ்ணா ஸ்வேதா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. புதன்கிழமை (செப்.7) இரவு வழக்கம்போல் தாயும், மகளும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர்.  நள்ளிரவில் எழுந்த மாணவி லஷ்ணா ஸ்வேதா திடீரென அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிகாலை 3.30 மணிக்கு  தாய் அமுதா எழுந்து பார்த்தபோது மகள் லஷ்ணா ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மகளின் உடலை பார்த்து அவர் கதறி துடித்தார். இது குறித்து திருமுல்லைவாயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி லஷ்ணா ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்த மாணவி லஷ்ணா ஸ்வேதா 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இருந்தார். இதையடுத்து அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் தொடர்பாக ஆன்லைனில் படித்து முடித்து உள்ளார். எப்படியும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் 3 முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி லஷ்ணா ஸ்வேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மாணவி லஷ்ணா ஸ்வேதா, ஆசிரியை அமுதாவுக்கு ஒரே மகள் ஆவார். அமுதா கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். மகளின் தற்கொலையால் அவரை மருத்துவராக்கும் நம்பிக்கையில் இருந்த அமுதா நிலை குலைந்து போய் உள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு மேலும் ஒரு மாணவியை காவு வாங்கி உள்ளது. தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. அது போன்ற எண்ணம் எழுவதை தடுக்க எண் 104ஐ தொடர்புகொண்டு மன நல ஆலோசனைகளை பெறலாம்.

;