what-they-told

img

எங்கள் தேசம் எது?

“இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க சரியான நேரத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலிப்பதாக அமித் ஷா உறுதியளித்துள்ளதால் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றில் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள சென்னையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமிற்கு சென்றோம்.  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சற்று தூரத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில்  பரந்து விரிந்து  ஓங்கி வளர்ந்த மரம், செடிகளுடன் இயற்கை எழிலோடு திறந்தவெளியில் அமைந்துள்ளது இலங்கை அகதிகள் முகாம். இங்குள்ளவர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள். 1,200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். (அரசின் கணக்கு 916 குடும்பங்கள்: 2,200 நபர்கள்)  ஒவ்வொரு தெருவாக சென்று பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என பலரைச் சந்தித்தோம். இன்னமும் சிலர் பழைய நினைவுகளுடன் வாழ்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது. பலர் மன வேதனையுடன் எதிர்காலம் குறித்த பயம் தோய்ந்த முகத்தோடு இருந்ததையும் காணமுடிந்தது. பலர் கோபத்தின் உச்சியில் கொந்தளித்தனர்.
பாசமா? நேசமா?
இந்த அகதிகள் முகாமில் இலங்கை மலையகத் தமிழர்களும், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் தங்கியிருக்கிறார்கள். தங்களது முன்னோர்கள் அனுபவித்த அந்தக் கொடுமைகள் இன்னமும் அவர்கள் கண்முன் நிற்பதால் இலங்கைக்கு செல்லவே விரும்பவில்லை மலையகத் தமிழர்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை, நாங்கள் எங்கள் நாட்டுக்கு சென்றே தீருவோம் எனக் கூறும் ஒரு பிரிவு பூர்வீக தமிழர்களும் இருக்கிறார்கள். நாங்கள் இங்கேயே வாழ நினைக்கிறோம் என்கிற தமிழர்களும் உள்ளார்கள். சிலரிடம் பேசத் துவங்கியதும், “இலங்கையில் வாழவே வழியில்லாமல் நிர்க்கதியாய் நிற்கும் லட்சக்கணக்கானவர்கள் பிழைப்பைத் தேடித்தான் இங்கு வந்திருக்கிறோம். எங்களை சட்டவிரோதிகளாக சித்தரிக்கிறார்கள். இது மனவேதனையாக இருக்கிறது. அரசாங்கத்தின் பார்வையில் சட்டவிரோதம் என்றால், எங்களது பார்வையில் இது வாழ்வாதாரத்துக்கான வழி”என்று ஓங்கி ஒலித்தது குரல்.
காயப்பட்ட நெஞ்சங்கள்
“ஒரு காலத்தில் கோட்டை கட்டி வாழ்ந்த இந்த தமிழர்கள், இன்றைக்கு சொந்த நாட்டிலேயே ‘பரதேசிகளாக’வாழக்கூடிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்திய அரசின் வருகைப் பதிவேட்டின் படி, சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தோம். முகாம் அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கல் என அற்பக் காரணங்களுக்காக பதிவை நீக்குவது வாடிக்கையாக உள்ளது. தற்போது 68,000 பேர்தான் முகாம்களில் இருப்பதாக அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால், பதிவு இல்லாமல் சுமார் 60,000 பேர் இருக்கிறோம்” என்று குமுறினார்கள்.
“இலங்கைப் போரினால் ஊனப்பட்டு, காயப்பட்டு, காணி, பூமி, சொந்த வீடுகளை இழந்து விவசாயமும் இல்லாமல், தொழிலும் கிடைக்காமல் சீரழிந்து கிடக்கும் எங்கள் உறவுகள், ரத்தங்கள் என அகதிகள் முகாமில் அடைபட்டுக் கிடக்கும் எங்களின் மறுவாழ்வுக்கு என்னதான் வழி?” என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
தேவை குடியுரிமை!
இங்கு இருப்பவர்கள் அகதிகளாக வந்திருந்தாலும் 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால், வெளியில் கிடைத்த தொடர்புகள் மூலம் பலர் பெண் கொடுத்தும், பெண் எடுத்தும் வாரிசுகளையும் பெற்றெடுத்து இருப்பதால் இந்திய குடியுரிமை அவசியம் வழங்க வேண்டும் என்பதே அந்த மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

 

;