technology

img

மின்சார வாகன உற்பத்தியில் சோடியம்  பேட்டரி முன்னணி வகிக்கும் ! - சி.ஏ.டி.எல் எதிர்பார்ப்பு

மின்கலன்களின்(பேட்டரி)  இலக்கணமே அதிக மின்னாற்றலை அதிக நேரம் தேக்கி வைப்பதுதான் .இந்த மின்கலங்களைத் தயாரிக்க லித்தியம் அயனி வேதிப் பொருளை உபயோகப்படுத்துவர் . ஆனால் , அதற்கு மாற்றாய் சோடியம் எனப்படும் உப்பினை வேதிப் பொருளாய் வைத்து மின்கலனை தயாரிக்கும் முயற்சியை ஐம்பது ஆண்டுகளாக சில முன்னணி நிறுவனங்கள் மேற்கொண்டனர்  . 

இந்த முயற்சியில் , பல்வேறு முன்னணி மின்கலன் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தாலும் , சீனாவின் சி.ஏ.டி.எல் எனும் மின்கலன் உற்பத்தி நிறுவனம் விடாமுயற்சியாய் இந்த ஆய்வில் ஈடுபட்டது .

இவ்வாறு உருவாக்கப்படும் சோடியம் பேட்டரிகள் ,  15 நிமிடங்கள் மின்னேற்றம் செய்தாலே, 80 சதவீதம் நிரம்பிவிடும் ஆற்றலுடையது . மேலும் , 20 டிகிரி குளிரிலும் இந்த பேட்டரி, 90 சதவீத மின்னாற்றலைத் தேக்கி வைத்திருக்கும் திறன் கொண்டது என்று சி.ஏ.டி.எல் நிறுவனத்தினர் தெரிவித்தனர் .

சி.ஏ.டி.எல் நிறுவனமானது , பிரபல மின் வாகனமான 'டெஸ்லா' முதல், உலகெங்கும் பல மடிக்கணினிகள், 'ஸ்மார்ட்போன்'களுக்கு மின்கலங்களைத் தயாரித்துத் தருகிறது. லித்தியம் அயனி மின்கலன்களைவிட, சிறப்பாகச் செயல்படும் சோடியம் அயனி மின் கலன்களைப் பெருமளவில் தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்தது .அவ்வாறு தயாரித்தால் மின்கலன் உற்பத்தியில் சி.ஏ.டி.எல் நிறுவனம் உலகளவில் முன்னணி வகிக்கும் என்ற கணிப்பும் இருந்தது .

இந்நிலையில் , கடந்த ஜூலை மாதம்  சி.ஏ.டி.எல் நிறுவனம் , சோடியம் அயனி மின் கலன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் , அவை எதிர்பார்த்த அளவிற்கு அதன் இலக்கை அடையவில்லை .

அதனைத் தொடர்ந்து , கடந்த சில நாட்களுக்கு முன் , இது குறித்துப் பேசிய சீனாவின் கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்த சோடியம்  பேட்டரிகளின் உற்பத்தியானது நாட்டின் வணிக வளர்ச்சிக்கு வித்திடும் முயற்சி என்று கூறியிருந்தது . 

அதன்படி , தற்போது சீன நிறுவனமான சி.ஏ.டி.எல் , சோடியம் அயனி மின் கலன்களை மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ளனர் . இதனால் , இனி வரும் நாட்களில் , உலகளவில் மின்சார வாகன உற்பத்தியில் சோடியம்  பேட்டரி முன்னணி வகிக்கும் என்று சி.ஏ.டி.எல் எதிர்பார்க்கிறது .

 

;