technology

img

அழுகிய பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பாக்டீரியா எதிர்ப்பு பேன்டேஜ்கள் 

சிங்கப்பூர் : சிங்கப்பூரிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் அழுகிய பழங்களிலிருந்து காயத்திற்கு ஒட்டும் பேன்டேஜுகளை தயாரித்து சாதனை படைத்துள்ளனர் . இந்த பேன்டேஜ்கள் மக்களிடத்தில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் , துரியன் பழங்களின் தோல் மற்றும் அழுகிய துரியன் பழங்களை வைத்து இயற்கையான முறையில் , பேன்டேஜுகளை தயாரித்துள்ளனர் . இந்த பேன்டேஜுகளை தயாரிக்க முதலில் இந்த பழங்களின் உமிகளிலிருந்து செல்லுலோஸை பிரித்தெடுத்து , அதை உலர்த்தி , பின்பு கிளிசரலோடு கலந்து , அந்த கலவையை மென்மையான ஹைட்ரொஜெல்லாக மாற்றுகின்றனர் . பின்னர் , அதை நீள வடிவில் காயத்திற்கு ஓட்டும்  பேன்டேஜ்களாக வெட்டுகின்றனர் .

இது குறித்துப் பேசிய நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டப் பேராசிரியர் வில்லியம் சென் , சிங்கப்பூரில் வருடத்திற்கு 12 மில்லியன் துரியன் பழங்களை உற்பத்திசெய்யப்படுவதாகவும் , அந்த பழத்தின் தோல் மற்றும் விதைகள் எதற்கும் உபயோகப்படாமல் மாசுவை ஏற்படுத்துவதாகவும் , அதனால் இந்த புது முயற்சியை எடுத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர் , இந்த தொழிநுட்பத்தின் மூலம் , சோயா மற்றும் தானியங்கள் போன்ற பிற உணவு கழிவுகளையும் இதுபோன்ற ஹைட்ரொஜெல் பேன்டேஜ்களாக மாற்றமுடியும் எனவும் , அதனால் நாட்டிலுள்ள உணவுக்கழிவுகளை குறைக்கமுடியும் எனவும் கூறினார் .

இந்த ஹைட்ரொஜெல் பேன்டேஜ்கள் , வழக்கமான  பேன்டேஜுகளை காட்டிலும் , காயமடைந்த பகுதிகளைக் குளிர்ச்சியாகவும் , ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது எனத் தெரிவித்துள்ளனர் . மேலும் , இவை காயப்பட்ட இடங்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றையும் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர் .