செங்கல்பட்டு,டிச. 10 செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், அனுமந்த புரம் இந்திரா நகர் பகுதியைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் புளியந்தோப்பு தெருவழியாக பயிற்சி மையத்தில் வெடிக்காத ஒரு வெடி பொருளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றுள்ளார். அப்போது அந்த பொருள் கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணன் அலறித் துடித்துள்ளார். வெடிபொருள் வெடித்ததில் அருகில் வீட்டின் வாசலில் துணி சலவை செய்து கொண்டிருந்த கோவிந்தம்மாள் (60) என்பவர் படுகாயமடைந்தார். மேலும் அவ்வழியாகச் சென்ற பசுமாட்டிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மறைமலை நகர் காவலர்கள் படுகாயம் அடைந்த வர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்திற்குச் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அருகில் உள்ள துப்பாக்கி பயிற்சி மையத்தில் ஏதேனும் பொருட்கள் கிடந்தால் அவற்றை எடுக்க வேண்டாம். அவ்வாறு யாரேனும் வீடுகளில் வைத்திருந்தால் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும்’’ என்றார் கடந்த ஆகஸ்ட் மாதம் திருக்கழுக்குன்றம் அருகில் மாணாம்பதி என்ற இடத்தில் சிறியவகை ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் இரண்டு இளைஞர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.