வேலூர், ஆக.31- திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அண்ணாண்டப்பட்டி ஊராட்சி மன்றக் கட்டடம் மிகவும் பழுதடைந்ததால் கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. பல மாதங்களாகியும், திறப்பு விழா நடைபெறவில்லை. இதனால், பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திலேயே பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல, ஊராட்சி மன்றக் கட்டடத்துக்கு அருகிலேயே கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கான அலுவலகமும் கடந்த 2017-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அந்த கட்டடமும் பல மாதங்களாகப் பூட்டியே கிடக்கிறது. இதுவரை இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவும் நடைபெற வில்லை. இந்த இரண்டு அரசு அலுவகங்களையும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.