tamilnadu

img

ஏலகிரியில் நாயக்கர் கால நடுகல் கண்டெடுப்பு

வேலூர், அக். 22- திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின்  தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி,  காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற் கொண்ட கள ஆய்வில் ஏலகிரிமலையில் நடு கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியது:- ஏலகிரியிலுள்ள 14 கிராமங்களில் ஒன்றான  பாடகானூரில் கள ஆய்வை மேற்கொண்ட போது கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளோம். இந்நடு கல் நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும்.  ஏலகிரிமலை வேலூர் மாவட்டத்திலுள்ள சிறந்த சுற்றுலாத்தளம் மட்டுமல்ல. ஆகச்  சிறந்த வரலாற்றுத் தடயங்களை உள்ள டக்கிய மலையாகவும் உள்ளது. நாகரிக வளர்ச்சியால் வரலாற்று ஆவணங்கள் அழிந்து வருகின்றன. பாடகானூரில் மக்கள் இந்நடுகல்லை வணங்கிப் பாதுகாத்து வருகின்றனர். பாடகானூரில் உள்ள ஊர்ப்  பொதுக் கோயிலுக்கு அருகே உள்ள விளைநிலத்தில் இந்த நடுகல் உள்ளது. கையில் வில், அம்புடன் வீரன் சித்தரிக் கப்பட்டுள்ளான்.  இம்மலையில் பல்லவர், சோழர் கால நடு கற்களைத் தொடர்ந்து, நாயக்கர் கால நடு கற்களும் கிடைத்திருப்பது கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக வெவ்வேறு இன  மன்னர்களின் ஆளுகையின் கீழ் இம்மலை  இருந்ததை இந்த நடுகல் உறுதிப்படுத்தி யுள்ளது. மேலும் இது போன்ற வரலாற்று ஆவணங்களைத் தொல்லியல் துறை பாது காக்கும்பட்சத்தில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் நிலைத்து வாழும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.