tamilnadu

img

சாதி சான்றுக்காக 35 ஆண்டுகளாக போராடும் குடுகுடுப்பைகார்கள்!

வேலூர், ஆக.10- சாதி சான்றிதழ் கேட்டு கணிக்கர் சமுதாய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ராணிப்பேட்டை சாராட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனு விவரம்: “வாலாஜாபேட்டை வட்டம், புளியங்கண்ணு கிராமத்தில் குறிசொல்லும் இந்து கணிக்கர் (குடு குடுப்பைக்காரர்) சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களின் பிள்ளைகள் 100-க்கும் மேற்பட்டோர் புளியங்கண்ணு, காரை, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். எங்கள் குழந்தைகளின் மேல்படிப்புக்கும், அரசின் சலுகைகளைப் பெறவும் கடந்த 35 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வருகிறோம்.  ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி.) இன சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஆனால் காஞ்சிபுரம், கன்னியாகுமரி போன்ற இதர மாவட்டங்களில் வசிக்கும் எங்கள் சமுதாயத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் குழந்தைகளுக்கும் ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்துள்ளனர்.