1915 - பெரிய அளவில் வேதியியல் ஆயுதம், முதன்முறையாக முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. பாலிமோவ் சண்டையில், போலந்தில் ரஷ்ய நிலைகளுக்கெதிராக ஜெர்மனியால் வீசப்பட்ட ஸைலைல்(மெத்தில்பென்ஸைல்) ப்ரோமைட், ஆவியாவதற்கு பதிலாக, ரஷ்யக் குளிருக்கு உறைந்துவிட்டதால் செயல்படவில்லை. உண்மையில் முதல் உலகப்போரிலேயே, அதற்கு முன்பாகச் சிறிய அளவில் வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதுடன், அவற்றின் தொடக்கமும் பண்டைய காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது. கி.மு.590களில், எதிரிகளின் நீராதாரங்களை, நஞ்சுள்ள ஹெலிபோர் செடியின் வேர்களைப் பயன்படுத்தி ஏதென்சின் கிரேக்கர்கள் நஞ்சாக்கியதே, உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட வேதியியல் ஆயுதமாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்பார்ட்டாவினரும், ஏதென்சின்மீது கந்தகக் கலவையை எரியூட்டி வீசியிருக்கிறார்கள். உணவையும், நீரையும் நஞ்சாக்குவதைப் போர்முறையாக மனுதர்மம் குறிப்பிட்டுள்ளது. சீனாவிலும் நச்சுப் புகைகளை உருவாக்குவதற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன. கி.பி.3ஆம் நூற்றாண்டின் ரோம-பாரசீகப் போர்களில் தகர்க்கப்பட்ட சுரங்கப் பாதைகள், வேதிமங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ளவையே, மிகப்பழைய வேதியியல் தாக்குதல் எச்சங்களாகும். போர்க்களத்தில் வேதிமங்களைப் பயன்படுத்தி மூட்டப்படும் தீ, கிரேக்கத்தீ என்று குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும், இவ்வாறு தீ பயன்படுத்தப்பட்டிருந்தாலும், 1993இல் கையெழுத்திடப்பட்ட வேதியியல் ஆயுதங்கள் உடன்படிக்கையில், தீயை மூட்டக்கூடிய வெள்ளை பாஸ்பரஸ், நேப்பாம் ஆகியவற்றுக்கும், உயிரியல் ஆயுதங்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது. முதல் உலகப்போரில் முதலில் வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது பிரான்ஸ்தான். அது பயன்படுத்திய கண்ணீர்ப்புகை வகையிலான வேதிமங்களே தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டாலும், 1915 ஏப்ரலில், மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவிக்கும் குளோரின் வாயுவை ஜெர்மனி பயன்படுத்தியது. 1899இன் ஹேக் பிரகடனம், 1907இன் ஹேக் ஒப்பந்தம் ஆகியவை போர்களில் நச்சு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்திருந்தாலும், முதல் உலகப்போரில் 50,965 டன் வேதிமங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான்தான் அதிக வேதிமங்களைப் பயன்படுத்தியது என்பதும், கொலைக்கூடங்களில் நச்சு வாயுக்களைப் பயன்படுத்திய ஹிட்லர், போரில் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை. நேப்பாமுக்கு விலக்கு அளிக்கப்படாவிட்டால், வியட்னாமின்மீது மட்டும் 3,88,000 டன் நேப்பாமைக் கொட்டிய அமெரிக்காவே, இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் மிகஅதிக வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்திய நாடாக இருக்கும்!
- அறிவுக்கடல்