tamilnadu

img

இந்நாள் ஜன. 22 இதற்கு முன்னால்

1917 - ‘வெற்றியின்றி அமைதி’ என்று அழைப்புவிடுத்த புகழ்பெற்ற உரையை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சன் நிகழ்த்தினார். உலகம் அதுவரை கண்டிராத (பிற்காலத்தில் உலகப்போர் என்றும், இரண்டாம் உலகப்போருக்குப்பின் முதல் உலகப்போர் என்றும் அழைக்கப்பட்ட!) பெரும் போர் நடந்துகொண்டிருந்த நிலையில், போரிட்டுக்கொண்டிருந்த நாடுகளை, போரைக் கைவிடக்கோரி, அவர் இந்த உரையை ஆற்றினார். போரிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும், போரை நிறுத்த விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்த அவர், அதன்மூலம் ஒரு தீர்வை உருவாக்கவும் முயற்சித்தார்.

அவர் சிறுவனாக இருந்த காலத்தில், அமெரிக்க உள்நாட்டுப் போரையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் காண நேர்ந்திருந்ததால், போர்களை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு தரப்பின் வெற்றி என்பது, மற்றொரு தரப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அவமானத்தை ஏற்படுத்திவிடுவதால், அதன்பின் ஏற்படும் அமைதி என்பது, புதைமணலின்மீது நிற்பதாகவே அமையும் என்று குறிப்பிட்ட அவர், இப்போரில் இறந்தவர்களை வீரம், தியாகம் என்பதெல்லாம் சரியல்ல, அனைத்தும் பயனற்ற பலிகளே என்றும் கூறினார். இவ்வளவும் பேசினாலும், இங்கிலாந்துக்கும், அதன் கூட்டணியான நேச நாடுகளுக்கும் அமெரிக்க வங்கிகள் கடன் தருவதையும், அமெரிக்க நிறுவனங்களின் ஆயுதங்களும், தளவாடங்களும் விற்பதையும் அவர் தடை செய்யவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அமெரிக்க பயணிகள் கப்பலான லூசிட்டானியா ஜெர்மன் நீர்மூழ்கிகளால்(யு-போட்) மூழ்கடிக்கப்பட்டு, 1,198 பேர் பலியானபோதுகூட நடுநிலையைத் தொடர்ந்த அமெரிக்கா, (இங்கிலாந்துக்குப் பொருட்கள் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன்) அமெரிக்க வணிகக் கப்பல்களை ஜெர்மனி தாக்கத் தொடங்கியதும், ‘அனைத்துப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவர ஒரு போர்’ என்ற அறிவிப்புடன், ஜெர்மனிமீது போரை அறிவித்து, உலகப் போரில் குதித்தது. ஐரோப்பிய மண்ணில் அதுவரை போரிட்டதில்லை என்பதால், அமெரிக்கப் படைகளால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற ஐயமும், ஒரு தரப்பிற்கு ஆதரவ ளித்தால், மறுதரப்புடனான வணிகம் பாதிக்கும் என்பதுமே அமெரிக்கா அதுவரை நடுநிலை வகித்ததற்கான உண்மையான காரணங்கள். ஆயுத வணிகத்தை எச்சூழலி லும் நிறுத்தவில்லையென்பதையும், வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதும் போரில் குதித்ததையும் மட்டுமின்றி, இன்றுவரை அமெரிக்கா தொடுக்கும் போர்களையும் கவனித்தால், வணிக நோக்கமே முதன்மையாக இருப்பது தெளிவாகப் புரியும்!

- அறிவுக்கடல்

;