tamilnadu

img

ஸ்ரீநகர், உதம்பூரில் பலத்த பாதுகாப்பு!

ஸ்ரீநகர், ஏப். 18-தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் கூறிய நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெற்ற ஸ்ரீநகர், உதம்பூர் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக வியாழனன்று ஸ்ரீநகர், உதம்பூர் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. சையத் அலி ஷா கிலானி, மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்ட பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.கடந்த 16ஆம் தேதியன்று ஜம்மு - காஷ்மீர் டிஜிபி தில்பாஹ் சிங் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஜம்மு - காஷ்மீர் காவல் துறை ஆகியன தேர்தல்நடைபெறும் தொகுதிகளில் குவிக்கப் பட்டன. தேர்தலையொட்டி கல்வி நிறுவனங்களுக்கு வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால், அப்பகுதியில் முற்றிலுமாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பாக பரூக் அப்துல்லா, பாஜக சார்பில் ஷெய்க் காலித் ஜஹாங்கீர், மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக அகா சையத் மொஹ்சின் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஸ்ரீநகர், பட்கம், காண்டர்பால் மாவட்டங்களைச் சேர்ந்த 15 சட்டமன்றத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. 1990 முதல் இத்தொகுதியில் குறைந்த அளவிலேயே வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இத்தொகுதியில் 12 லட்சத்து 95 ஆயிரத்து 304 வாக்காளர்கள் உள்ளனர்.இத்தொகுதியில் 2014ஆம் ஆண்டு 26 சதவிகித வாக்குப்பதிவு நடந்தது. 2017ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் 7.14 சதவிகித வாக்குப்பதிவே நடைபெற்றது. பிரிவினைவாத இயக்கங்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அறிவிப்பது வழக்கமானதுதான் என்று தெரிவித்துள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா.உதம்பூர் மக்களவைத் தொகுதியில் 16 லட்சத்து 85 ஆயிரத்து 779 வாக்காளர்கள் உள்ளனர். கிஷ்த்வர், ரம்பன், ரீசி, தோடா, உதம்பூர், கத்துவா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 17 சட்டமன்றத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இங்கு பாஜக சார்பில் ஜிதேந்திர சிங், காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்ய சிங், டோக்ரா ஸ்வாபிமான் சங்கதன் சார்பில் லால் சிங் ஆகியோர் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

;