பெரம்பலூர், மே 9-பெரம்பலூர் மாவட்டத்தில் செவ்வாயன்று இரவு முதல் அதிகாலை வரை பல்வேறு இடங்களில்பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. வேப்பந்தட்டை பகுதியில் கோடை மழை பெய்யாதா என மக்கள் ஏங்கித் தவித்தனர். இந்நிலையில் மீண்டும் புதன் இரவு திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் வாழை மரங்கள் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குலை தள்ளிய வாழைகள் அனைத்தும் ஒடிந்து கீழே விழுந்தன. குறிப்பாக பெரிய வடகரையை சேர்ந்த விவசாயி மாணிக்கம் என்பவர் சுமார் 3 ஏக்கர் நிலத்தில்பயிரிடப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் கீழே விழுந்து நாசமாகின.இதே போன்று பல்வேறு விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் கீழே சாய்ந்து சேதம் அடைந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள வாழைகளை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்டத்தில் வியாழன் காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்(மி.மீ): பெரம்பலூர்- 25, வேப்பந்தட்டை- 26, தழுதாழை- 48, பாடாலூர்- 59, செட்டிக்குளம்- 26, எறையூர்- 2, லப்பைக்குடிக்காடு- 5, கிருஷ்ணாபுரம்-15, வி.களத்தூர்- 28 என மொத்தம் 234 மி.மீ பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.27 மி.மீ ஆகும்.