விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் கைதான 11 பேரை 3 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது
மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த போலீசார் சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து,ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வழங்கிய புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையிலிருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய 11 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டதையடுத்து, விசாரணை அலுவலராக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில்அடைக்கப்பட்ட 11 பேரையும் 3 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் செவ்வாய்கிழமை மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வழக்கில் கைதான 11 பேரையும் சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி எம்.புஷ்பராணி 11 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மே 26(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் 11 பேரையும் பலத்த பாதுகாப்புடன் விழுப்புரம் காகுப்பம் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர்.