tamilnadu

img

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முகக் கவசம், உணவுப் பொருள்கள் வழங்காத நிலை

விருதுநகர்:
விருதுநகர் நகராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முகக் கவசம் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்காத நிலை உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் களப் பணியில் முன்னணிப் படை வீரர்களாய் செயல்பட்டு வருவது  துப்புரவுத் தொழிலாளர்கள். எனவே,  தமிழக அரசு, அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அன்றாடம் வீதியெங்கும்  குப்பைகளை சேகரிப்பது. கிருமி நாசினிகளை தெளிப்பது. வீடுதோறும் பிளிச்சிங் பொடி வழங்குவது என அன்றாடம் ஏராளமான பணிகளை துப்புரவுத் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் 138 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஆட்சியர் இரா.கண்ணன்  முகக் கவசம் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.இதேபோல், அருப்புக்கோட்டை நகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மூலம் முகக் கவசங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாவட்டத் தலைநகரான விருதுநகரில் பணிபுரிந்து வரும் 85 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மற்றும் 98 தற்காலிக துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தற்போது வரை உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால், இரவு பகல் பாராது  கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் பெரும் மனச் சோர்வுடன் தங்களது  பணியை செய்து வருகின்றனர். இதேபோல் ஏராளமான ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் தொகுப்புகள் வழங்கப்படாத நிலை உள்ளது.எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இப்பிரச்சனையில் உரிய தலையீடு செய்து உடனடியாக துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் முகக் கவசங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;