tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி தலையீட்டால் ரேசன் கடையில் தரமான அரிசி விநியோகம்

விருதுநகர்:
விருதுநகர்-சிவகாசி சாலை ரேசன் கடையில் பொது மக்களுக்கு புழுத்துப்போன அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டால் நல்ல அரிசி உடனடியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

விருதுநகர்-சிவகாசி சாலையில் வி.வி.கே.சி.எஸ்- கடை எண் 16  செயல்பட்டு வருகிறது. இங்கு, முத்துராமலிங்கம் நகர், சிவகாசி சாலை, பழைய சிவகாசி சாலை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கார்டுதாரர்கள் ரேசன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இங்கு கடந்த சில நாட்களாக அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் உண்பதற்கு  லாயக்கற்ற கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த அரிசியை விற்பனையாளர் தொடர்ந்து வழங்கி வருவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். நகர்குழு உறுப்பினர் பி.ராஜா, மாரிக்கனி, சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி செல்வம், சுரேஷ் ஆகியோர் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் 5 கிலோ நல்ல அரிசி,5 கிலோ பச்சரிசி மற்றும் 10 கிலோ கெட்டுப் போன அரிசியை பொது மக்களுக்கு வழங்க  வட்டார நிர்வாகம் உத்தரவிட்டதாக  கடை விற்பனையாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, வி.வி.கே.சி.எஸ் கூட்டுறவு சங்கத் தலைவர் முகமது நெய்னாரிடம்  சிபிஎம் சார்பில் ளபுகார் செய்யப்பட்டது. முடிவில், உடனடியாக அனைத்து கார்டுதாரர்களுக்கும் நல்ல அரிசியை வழங்கவும், கெட்டுப்போன அரிசியை வழங்க கூடாது எனவும் விற்பனையாளருக்கு அவர் உத்தரவிட்டார். பின்பு உடனடியாக நல்ல அரிசி வழங்கப்பட்டது.
 

;