tamilnadu

img

கோவிட் தொற்று மருந்தும் கொள்ளையை தடுக்காத அரசும் - என்.சிவகுரு

கோவிட் 19 உருவாக்கி வரும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. உயிரிழப்புகள், பொருளாதாரச் சீர்குலைவு, தனி நபர் வருமானம், வாழ்வாதாரம் என எல்லாமே பெரும் விவாதப் பொருளாகி வரும் வேளையில் உலகம் முழுதும் பொது சுகாதார கட்டமைப்பு , அதன் பங்களிப்பு, அவை உருவாக்கியிருக்கும் தாக்கம், அதை பலப்படுத்திட வேண்டிய அவசியம், அது இல்லாமல் போனால் இந்த நோய்த்தொற்றின் தாக்கம் என்ன வடிவங்களிலெல்லாம் இருந்திருக்கும் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. 

இந்த கொடும் நோய்த்தொற்று காலத்திலும் தனியார்  துறை செய்து வரும் சுரண்டல், மருந்துகளின் பெயரில் கொள்ளையடிக்கும் நிறுவனங்கள், இந்திய அரசு மருத்துவ மனைகளின் திறமைமிக்க பணி என எல்லாவற்றையும் அணுகினால் தான் நமக்கு புதிய வெளிச்சம் கிடைக்கும்.

உலக அனுபவம்

இன்று நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா என பட்டியலில் முதல் மூன்று நாடுகள் இருக்கின்றன. இதை விட கடுமையாக பாதிப்புக்களை சந்தித்த நாடுகள் இருக்கின்ற போதிலும், தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாகவே இதுவே தான் உலக நிலை.  இம்மூன்று நாடுகளுக்குள்ளும் ஓர் ஒற்றுமை உண்டு. அது நமக்கே ஆச்சரியம் அளிக்கும் தகவலாகக் கூட இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. 

இம்மூன்று நாடுகளின் மக்கட்தொகையில் சரி பாதிப் பேர் உயர் மத்திய தர வகுப்பினர்;  மருத்துவ சிகிச்சைக்காக அரசை நம்பியிராமல், தனியாரிடம் சிகிச்சை பெறும் அள வுக்கு கொஞ்சம் வசதி படைத்தவர்கள். ( நம்மில் சிலர் இதை ஏற்க மறுக்கலாம். ஆனால் இது ஓர் ஆய்வின் முடிவு.)  அப்படியென்றால் இந்த மூன்று நாடுகளிலும், இந்த நோய்த் தொற்றுக்கான சிகிச்சையை தனியார் யாரும் தேவையான அளவுக்கு செய்யவே இல்லை.  மற்றுமொரு புள்ளி விவரம். இந்தியாவில் பொது சுகாதாரக் கட்டமைப்பை விட தனியாரே பேராதிக்கம் செலுத்துகிறார்கள். கட்டணம் செலுத்தி சிகிச்சை செய்து கொள்ளும் மக்களே அதிகம். அதாவது மொத்த மக்கட் தொகையில், 85% பேர் புற நோயாளிகளாகவும், 60% உள் நோயாளிகளாகவும் தனியாரிடமே சிகிச்சை பெறு கின்றனர்( இது ஆங்கில சிகிச்சை முறை மட்டுமே) 

இந்த தகவலோடு இன்னொரு விவரத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று அரசு மற்றும் தனிநபர் காப்பீடு என்பது ஒரு இடையக ஏற்பாடே ஒழிய முழு தீர்வல்ல; அது ஓரளவுக்கு சுமையை குறைக்கிறது. தொடர்ச்சி யான வளர்ச்சி இலக்குகளை அடைய காப்பீடு ஒரு உதவிக்கரம். அவ்வளவே.  இப்போதும் கூட பலர்  நம் நாட்டில் மருத்துவத்துக்கான செலவினங்கள் குறைவு, அதாவது மிக குறைந்த செலவில்  மருத்துவம் செய்து கொள்ளலாம் என  வளர்ச்சியடைந்த நாடுகளோடு நம் நாட்டை ஒப்பிடுகின்றனர். அதில் மறைந்திருக்கும் உண்மை என்ன? மேலை நாடுகளின் தனி நபர் வருமானம் என்ன? நம் நாட்டின் நிலை என்ன? 

நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பொது சுகாதாரக் கட்டமைப்பை மட்டுமே நம்பி இருக்கும் மக்களின் எண்ணிக்கை தான் அதிகம். இந்தச் சூழ்நிலை யில் பொது சுகாதாரக் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்தி, அதை பொறுப்புள்ள நிறுவனமாக ஆக்கிட உரிய முயற்சி கள் எடுத்திடல் அவசியம். தேவையான மாற்றங்கள் செய்திட அரசின் தலையீடுகள் முக்கியமான நடவடிக்கைகளில் தேவை. மருத்துவம் அனைவருக்குமானது எனும் உயரிய எண்ணம் முதலில் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். மாறாக அவர்களே தனியாரை ஊக்குவிப்பது வேடிக்கை முரண்.  தற்போதைய கோவிட் பேரிடர்  சூழலில் உலகமெங்கும் இருக்கும் வலதுசாரி பொருளாதார அறிஞர்களே ஒரு வலுவான பொது சுகாதாரக் கட்டமைப்பே மக்களை பாதுகாக்கும், அதுவே இன்றைய தேவை என சொல்லத் துவங்கியுள்ளனர். தேவைகேற்ப தங்களின் நிலையை மாற்றிச் சொல்லும் குணம் கொண்டவர்கள் அவர்கள். பொருளாதார நிலை எல்லோரின் குரல் வளையை நெரிக்கும் சூழலில் இருக்கும் போது பொது சுகாதாரக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்திட கூடுதல் நிதியை ஒதுக்க நாம் களமாட வேண்டும். 

கோவிட் மருந்துகள்... கொள்ளை லாபமே

உலகமெங்கும் இந்த வைரஸ் தொற்று பெரும் துயரங்களை , உயிரிழப்பினை, பொருளாதாரச் சரிவை ஏற்படுத்திவிட்டது, இதிலிருந்து உலகம் மீண்டு எழ பல வருடங்கள் ஆகும். அதே வேளையில் இந்த நோயை எதிர்கொள்ள தடுப்பூசி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு உலகத்தின் பல நாடுகளும் இதற்கான ஆராய்ச்சி யை செய்து வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல், இத்தாலி, இந்தியா என நாடுகளின் பட்டியல் நீண்டு வருகிறது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதை போல, கோவிட் தொற்று பரவ துவங்கிய காலத்தில் பல மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. எதுவும் தீர்வளிக்க வில்லை. தெரிந்தே தான் அந்த வேலையை ஆட்சியா ளர்கள் செய்தார்கள்.  பிரச்சனையை திசை திருப்ப, நீர்த்துப் போக வைக்க என பல முயற்சிகள் நடந்தன. 

அதன் பிறகு ஆங்காங்கே சில நாடுகள் தங்களின் பரிசோதனை முயற்சிகளை துவக்குவதாக அறிவித்தது. அமெரிக்காவை தலைமையகமாக கொண்டிருக்கும் சில மருந்துக் கம்பெனிகள், கிட்டத்தட்ட தடுப்பூசி ரெடி என்ற னர். அதற்கு பிறகு இஸ்ரேல் நாங்களும் ரெடி என்றது.  உடனே இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் அனைத்து கட்ட பரிசோதனைகளும் முடிந்தது என்றது. இது தான் வாய்ப்பு என பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்து உலகத்துக்கே நாம் தான் முதலில் கொடுப்போம் என சரடு திரிக்க துவங்கினார். தற்சார்பு இந்தியா. இதோ பாருங்கள்!  என்றெல்லாம் ஒரே சத்தம்..  இதற்கிடையில் பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலர்   மாட்டு மூத்திரம் துவங்கி அப்பளம் வரை கோவிட் எதிர்ப்பு  மருந்துகள் என பரிந்துரைத்தனர். 

இந்த கூத்துகளுக்கு இடையில் உலக சுகாதார நிறுவனம் எந்த தடுப்பூசியும் முறைப்படி, தேவையான மருத்துவ பரிசோதனைகள் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட முடியாது எனவும், அப்படி அதையும் மீறி  செய்தால் அதற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க இயலாது எனவும் சொன்னது. இப்போது இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் முறைப்படி  மனிதர் சோதனை உட்பட நடத்தி தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.  இந்த பக்கம் தடுப்பூசி கண்டுபிடிப்பு என நடந்து கொண்டிருக்கும் போதே கார்ப்பரேட் உலகம் இருக்கும் வாய்ப்பை எப்படி லாபமாக்கி கொள்ளலாம் என்பதை யோசித்தது. தடுப்பு மருந்து இதோ இருக்கிறது. இனி பிரச்சனையே இல்லை என அறிவித்து ரெம்டெசிவிர், பெவிபிரவிர் (REMDESIVIR & FAVIPIRAVIR ) என இரு மருந்துகளை அறிமுகம் செய்தது. இதில் முதலாவது ஊசி, இரண்டாவது மாத்திரை.  இந்த ஊசி மருந்து எபோலா வைரஸ் தொற்று பரவலின் போது கொண்டுவரப்பட்டது.  இந்த ஊசியின் (100மில்லி கிராம்) விலை ரூ5400.& 4000 ( இரு வேறு நிறுவனங் கள்) இந்த மருந்தை வைரஸ் தொற்று பேரிடர் முடியும் வரை  விற்பனை செய்ய கிலியாட் நிறுவனம் இந்திய நிறுவன ங்களான சிப்லா மற்றும் ஹெடிரோவுக்கு கொடுத்துள்ளது. 

பெவிபிரவிர் மாத்திரை கிலன் மார்க் (GLENMARK) எனும் நிறுவனத்தின் மாத்திரை. அதன் விலை ரூ. 108 அதை பரிந்துரைக்கும் முறைப்படி ஒரு நோயாளி எடுத்து கொள்ள ரூ.12,566 செலவாகும்.  இந்த மருந்து நேரிடை யாக கோவிட் 19 க்கான மருந்து இல்லை. இன்ஃப்ளு யென்ஸா ( INFLUENZA)வகை வைரஸ் கிருமிக்கான தடுப்பு மருந்து.  அடிப்படையில் வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படு த்தும். அவ்வளவே. ஆனாலும் முக்கியமான மருந்து . இப்படி இருக்கும் இந்த மருந்துகளை கூட அனைவரும் பயன்படுத்தும் வகையில் விலை கட்டுப்பாடிற்குள் இல்லையே.  பேரிடர் மற்றும் அவசர உயிர் காக்கும் நேரத்தில் கூட  லாபமே குறிக்கோளாக பெரு நிறுவனங்கள் செயல்படுவது அநியாயம் என்றால், அதை அனுமதிக்கும் அரசு அதை விட பெரும் குற்றவாளி இல்லையா? இதில் கொடுமை என்னவென்றால் இந்த மருந்துகள் முழுமையான குணமளிக்கும் என அறுதியிட்டுச் சொல்லவே முடியாது. 

மக்கள் நல அரசு  என்ன செய்ய வேண்டும்? 

 இந்த கொடுந்தொற்று காலத்தில் மக்களை அரணாக நின்று பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. அதை இந்தியாவில் மத்திய அரசு செய்கிறதா? என கேட்டால் “இல்லை” என உறுதியாகச் சொல்ல முடியும். இந்தியாவை சீர்குலைக்கும் பல சட்டங்கள் இயற்றப்படும் இந்த காலத்தில் மக்களுக்கான மருந்துகள் சகாயமான விலையில் கிடைத்திட கட்டாய லைசென்சிங் முறையை இந்த மருந்துகளுக்கு செய்ய வேண்டுமல்லவா?  ஒரு மருந்து விற்பனை செய்யப்படும் போது லாபம் என்பது நிறுவனங்களுக்கு தேவை. மறுப்பதற்கில்லை. ஆனால் கொள்ளை லாபம் கூடாதல்லவா? இந்த பெருந்தொற்று காலத்தில் லாபத்தை கட்டுக்குள் கொண்டு வர அவசரச் சட்டம் இயற்றி பல நாடுகள் நமக்கு முன்னோடி யாக இருக்கின்றன. அதை இந்தியா பின்பற்றலாமே.

முதலாளிகளுக்கு சகல சுதந்திரத்தையும் கொடுத்து விட்டு “நான் மக்களின் காவலன்” என வெட்டியாக விளம்பரம் செய்வது என்ன நியாயம்?  ஒரு உண்மையான மக்கள் நல அரசாக இருப்பின் இன்று உலக நாடுகள் வரிசையில் மூன்றாவது இடத்தில்  இருக்கும் நம் நாட்டில் பொது மருத்துவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஒரு பக்கமும், தனியார் துறையை கட்டுப் படுத்தும், முறைப்படுத்தும் வேலையை மறுபக்கமும் செய்ய வேண்டும். ஆனால் தற்போதுள்ள அரசோ அதற்கு நேர் எதிர் மறையாக பணிகளை செய்கின்றது.

மக்கள் ஆரோக்கியம் என்பது வணிகமயமாகி விட்டது. நாம் தனியாரே வேண்டாம் என முற்றிலும் நிராகரிக்க வில்லை. ஆனால் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானடித்த மூப்பாக அவர்களை சுரண்ட விடுவது சரியல்ல. கொரோனா தாக்கம், அதன் பாதிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில் உலக படிப்பினைகள் மற்றும் அனுபவங்களை கவனத்தில் கொள்ளத் தவறினால் இழப்புகளை தடுத்திடவே முடியாது.