tamilnadu

img

நாளை தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம்

வி.பி.சி என்று தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களாலும், இளைஞர்களாலும், மாணவர்களாலும் அன்புடன் நினைவு கூரப்படும் தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் இந்திய புரட்சிகர இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.1939 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் வி.பி.சிந்தன் இணைந்தார். அப்போது அவருக்கு வயது 21. அதிலிருந்து தமிழக உழைக்கும் மக்களின் லட்சியத்துக்காக ஓய்வுஒழிச்சல் இன்றி வீரம்செறிந்த போராட்டங்கள் நடத்துவதாகவே அவரது வாழ்க்கை அமைந்தது.தொழிலாளர்களுக்கும், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியர்க்கும் அரசியல் ரீதியான, தத்துவார்த்த ரீதியான போதனை செய்வதை தனது அரசியல் வாழ்க்கையின் பிரதான நோக்கமாக கொண்டிருந்தார். ஏராளமான இயக்கப் பணிகளுக்கு இடையிலும் தினமும் படிப்பதற்கும் நேரத்தை ஒதுக்கினார்.சுயவிமர்சனம் உள்பட, விமர்சனம் செய்யும் உரிமையை இயக்கத்தில் கறாராக மேற்கொண்டவர். அவர் திடமான மனிதர். உழைக்கும் மக்களின் லட்சியத்திற்கு முழுவிசுவாசமாக இருந்தார். அவருடைய இத்தகைய குணங்கள் தான் புரட்சிகர இயக்கத்தின் எதிரிகளிடமிருந்து வந்த கடுமையான ஒடுக்குமுறைகளையும், பெரும் ஆபத்துக்களையும் எதிர்த்து நிற்கும் உறுதியை அவருக்கு அளித்தன.விஞ்ஞான தத்துவத்தின் வளர்ச்சியில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தவர். அவர் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னணி கள வீரராகவும், தலைவராகவும் திகழ்ந்தவர். அதே சமயத்தில் தத்துவத்தில், சமூகவியலில், வரலாற்றில், இலக்கியத்தில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். அவற்றை ஆழமாக அறிந்துகொள்வதோடு மட்டுமின்றி அவற்றை சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் இணைப்பதிலும் அக்கரை செலுத்தியவர்.

1942ல் கட்சி கட்டளைக்கிணங்க சென்னைக்கு வந்தார். 1943லிருந்து சென்னையில் தொழிற்சங்க பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அன்று முதல் சென்னை மாநகர தொழிலாளர்களின் பாசமிகு தலைவராக விளங்கினார்.1946ல் விடுதலைப் போராட்டத்தில் தனி முத்திரை பதித்த கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக தொழிலாளர்களை திரட்டினார் வி.பி.சி.பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுதலை அடைய நடந்த போராட்டங்களில் தோழர் வி.பி.சி, மேஜர் ஜெய்பால் சிங்குடன் இணைந்து பணியாற்றினார். அதேபோன்று போர்ச்சுகீசியர் ஆதிக்கத்திலிருந்த கோவா விடுதலைக்கு தொண்டர்களை தயார் செய்து அனுப்பி வைப்பதில் பெரும் பங்காற்றினார்.1967-71 காலகட்டங்களில் கடும் அடக்குமுறைகளை - தாக்குதல்களை தொழிற்சங்க இயக்கம் சந்தித்தது. அப்போது அடக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று அடக்குமுறைகளை துணிச்சலாக எதிர்கொண்டவர்.1968ல் மாணவர் - போக்குவரத்து தொழிலாளர்க்கு இடையே நடந்த மோதலில் சையத் உமர் என்ற டிரைவர் தாக்கப்பட்டு உயிர் நீத்தார். அவரது சவ ஊர்வலப் பாதையை மாற்றி பெரும் கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் முயற்சித்தனர். அதை தடுக்கும் வகையில் தோழர் வி.பி.சி, ஊர்வல முகப்பில் நின்றுகொண்டு’ ஊர்வலப் பாதையை மாற்ற விரும்புவோர் யாராக இருந்தாலும் என்னைக் கொன்ற பிறகு என் பிணத்தின் மீதுதான் நடந்துபோக வேண்டும் என ஓங்கி குரல் எழுப்பியதன் விளைவாக பெரும் கலவரம் தடுக்கப்பட்டது.1972ல் எம்.ஆர்.எப் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தையொட்டி வி.பி.சி, குசேலர், கே.எம்.அரிபட், பி.ஆர்.பரமேஸ்வரன் ஆகிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் நான்கு தோழர்களுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்து அவரே வழக்கில் ஆஜராகி பெற்றுத் தந்தார்.

மன உறுதியின் மறுபெயர்

1973ல் மாதவரம் பால்பண்ணை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக டவுன் பஸ் மூலம் மூலக்கடை வழியாக பயணித்தபோது மூலக்கடையில் சமூக விரோதிகளால் கத்திக் குத்துக்கு ஆளானார். சம்பவத்தின் போது சமூக விரோதிகள் அவரை தடியால் தாக்கியது மட்டுமல்ல, கத்தியால் மாறி மாறி குத்தினார்கள். வி.பி.சி தனது மனவலிமையால் அத்தனை தாக்குதலையும் தாங்கிக்கொண்டார். இறந்துவிட்டார் என கருதிதான் சமூக விரோதிகள் அந்த இடத்தை விட்டு செல்கின்றனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒருமாத சிகிச்சைக்கு பின் உடல் தேறிய வி.பி.சியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். வி.பி.சியின் நெஞ்சம் நெகிழ்ந்து இரண்டே வரிகள் தான் அந்த கூட்டத்தில் பேசினார். “தோழர்களே, அதிக நேரம் பேச முடியாமல் இருக்கிறேன். ஏராளமான இரத்தம் சிந்தப்பட்டதால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். மிச்சமிருக்கும் ரத்தமும், சதையும் உங்களுக்காகத் தான்” என கூறியபோது கூட்டத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்காண உழைப்பாளி மக்கள் கரவொலி எழுப்பிக்கொண்டே கண்ணீர் சிந்திய காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க செய்தது.

இன்றைய தொழிற்சங்க இயக்கங்களில் போக்குவரத்து சம்மேளனம் வலுவாக செயல்படுவதற்கு வி.பி.சி எவ்வாறு காரணமோ அதே போன்று மின் ஊழியர் மத்திய அமைப்பை உருவாக்கவும் வி.பி.சி பாடுபட்டார்.

தொழிலாளர்களுடைய தவறை எவ்வித தயக்கமின்றி தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்ட வேண்டும்; அவர்கள் கோபமடைந்து விடுவார்கள் என பயப்படக்கூடாது என்று வி.பி.சி. கூறுவார். தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக போராடுவது மட்டுமின்றி தொழிலாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார். உதாரணமாக மக்களிடம் போக்குவரத்து ஊழியர்கள் அனுசரணையாக பழகவேண்டும் முறையாக பேச வேண்டும் என்று கூறுவார்.

தோழர் வி.பி.சி மனிதர்களை ஈர்த்த ஒரு காந்த சக்தி. வி.பி.சி தனது கம்யூனிச இயக்க வாழ்வில் ஏராளமானோரை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கொண்டுவந்தார். தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமை தாங்கும் தலைவர்களில் பலரை அவர் உருவாக்கினார். 1984ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.பி.சி வில்லிவாக்கம் தொகுதியில் மகத்தான வெற்றிபெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன், இரவு பகல் பாராமல் தொகுதி மக்களின் தேவைகளுக்காக களத்தில் இறங்கி பணியாற்றியதை யாராலும் மறக்க முடியாது. 

மாஸ்கோ மேதின அணிவகுப்பு

1987ம் ஆண்டு மாஸ்கோ பாரம்பரிய மேதின அணிவகுப்பை பார்வையிடவும், இந்திய - சோவியத் தொழிற்சங்கங்களிடையே உறவை மேலும் பலப்படுத்த சிஐடியுவும் இதர சங்கங்களும் ஒரு தூதுக்குழுவை அனுப்ப வேண்டும் என்று சோவியத் தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் சிஐடியு அகில இந்திய மையம் தோழர் வி.பி.சி அவர்களை மாஸ்கோவிற்கு அனுப்பி வைத்தது.

மாஸ்கோ சென்ற வி.பி.சி., மேதின அணிவகுப்பை பார்வையிட்டார். பிறகு 3ந்தேதி முதல் 5ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச விஞ்ஞானப்பூர்வ சோசலிச மாநாட்டில் ‘அக்டோபர் புரட்சியும், வளர்முக நாடுகளின் மீது அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். மே 7ந்தேதி வரலாற்று பிரசித்திபெற்ற ஸ்டாலின் கிராடு நகரத்தில் உள்ள யுத்த வீரர்களின் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

8ம்தேதியன்று அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி போனது. அன்று இரவு 8 மணிக்கு காலமானார்.

தமிழக தொழிலாளர் வர்க்கத்தின் வீர போராட்ட வரலாற்றில், சோசலிச லட்சியத்திற்கான உறுதிமிக்க போராட்ட வரலாற்றில் தொழிலாளி வர்க்கத்தின் தோன்றாத் துணைவராகவும், வழிகாட்டியாக இருந்தவருமான அவரது பெயர் என்றென்றும் நினைவுகூரப்படும் வகையில் சிஐடியு மாநிலக்குழு விடுத்த அறைகூவலுக்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் மே - 8 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 20 ஆண்டுகளாக ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வி.பி.சி நூற்றாண்டையொட்டி கடந்த 1வருடகாலமாக இளம்தொழிலாளர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு வி.பி.சியின் நூற்றாண்டு நிறைவு என்பதால் அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரத்ததான முகாம் நடத்துவது, இளம் தொழிலாளர்களுக்கான பயிற்சி முகாம்கள், கருத்தரங்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.



;