tamilnadu

img

கொரோனா நிவாரணம் வழங்கக் கோரி தையல் கலைஞர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜுலை 21- கொரோனா நிவாரணம், ஓய்வூதியர்களுக்கான 10 மாத நிலுவையை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   சம்மேளனத்தின் மாநில தலைவர் ப.சுந்தரம் தலைமையில் சென்னையில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் பொதுச்செயலாளர் ஐடா ஹெலன், திருவாரூர் நலவாரிய அலுவலகம் முன்பும் பொருளாளர் மாலதி ஆகியோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு தையல்  தொழிலாளர்நல வாரியத்திலிருந்து கடந்த பத்து மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் கொரோனாகாலத்தில் 60 வயது பூர்த்தி செய்த தொழிலாளர்களை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் கொரோனா ஊரடங்கு காலநிவாரண நிதி வழங்க வேண்டும். தையல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நல வாரியத்தில் புதிதாக ஏற்படுத்தியுள்ள ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும். முறையாக தொழிலாளர் துறையில் தணிக்கை கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு பதிவிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு மட்டுமே ஆன்லைன் பதிவுக்கு அனுமதிக்க வேண்டும். கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு ஊதியத்தை வருடா வருடம் 5 சதவிகிதம் உயர்த்தி வழங்க ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நடைமுறைபடுத்த வேண்டும். அரசாணைப்படி கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகையும் கணக்கீடு செய்து வழங்கிட வேண்டும். கோட் தைப்பதற்கான நியாயமான கூலியை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தையல் கலைஞர்கள் மாநிலம் முழுவதும் பங்கேற்றதாக மாநில பொதுச் செயலாளர் ஐடா ஹெலன் தெரி வித்தார்.

;