tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம்... கைது

மதுரை:
மருத்துவ படிப்புக்கான நீட்நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி அனிதா நினைவுநாளில் மாணவர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால், கல்வி நிலைய செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ள சூழலில் மத்திய அரசு வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் மனநலன் பெரிதும் பாதிப்படைகிறது. ஆகவே, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசு உச்சநிதீமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் நினைவு நாளான செவ்வாயன்று மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை
மதுரையில் நடைபெற்ற மனுக்கொடுக்கும் போராட்டத்தில்  மாணவர்சங்க மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் எஸ்.வேல்தேவா, மாநிலத் துணைத்தலைவர் கண்ணன், அகில இந்திய ஜனநாயகமாணவர் சங்க மாநிலச் செயலாளர் சுகுபாலா, மாவட்ட நிர்வாகி செல்வி,எஸ்.யு.சி.ஐ மாவட்டச் செயலாளர்வால்டேர் ஆகியோர் கலந்துகொண்டனர்.மனுவை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்த ஆர்.பி.உதயகுமாரிடம் தான் அளிப்போம் என மாணவர்கள் தெரிவித்தனர். இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாய மாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் எஸ்.எப்.ஐ மாவட்டத் தலைவர் கே.சமையன், ஏ.ஐ.எஸ்.எப் மாவட்டத் தலைவர் ஸ்ரீராம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், எஸ்.எப்.ஐ மாவட்ட செயலாளர் கே.மாடசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட தலைவர் கே.பகத்சிங், மாவட்ட செயலாளர் ஆர்.கவின்ராஜ், மாணவர் பெருமன்ற மாநில துணைத் தலைவர் தினேஷ் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். 

கோவை
கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாணவர் சங்கத்தினர் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.வினிஷா, மாவட்ட துணைத் தலைவர் செ.நவீன்குமார் உள்ளிட்ட மாவட்டநிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் என். .தமிழமுதன்  உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

;