ஜெய்ப்பூர்,ஆக.14- ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி ஆட்சி மற்றும் கட்சி பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் காங்கிரசில் இணைந்தனர். ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான முன்மொழிவை சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி குமார் தாரிவால் வெள்ளியன்று தாக்கல் செய்துள்ளார். இதன்பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது என்று சபாநாயகர் அறிவித்தார்.