பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலப்பணிகளில் பயன்படுத்தப்படும் மிதவைகள் தொடர்ந்து ரயில் பாலத்தில் மோதுவதால் ராமேஸ்வரத்திற்கு தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
1914-ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 106 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் ராமேஸ்வரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்லும் வகையில் அமைக்குப்பட்டுள்ள தூக்கு பாலம் கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து உள்ளது. இதனால் சில நேரங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு ராமேஸ்வரம் வரும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகிறது.
இதனால் பாம்பன் கடலின் மீது இரு வழி பாதை கொண்ட ரயில் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. இந்நிலையில் வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்படும் மிதவைகள் காற்றின் வேகத்தால் கட்டுப்பட்டை இழந்து பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதுகின்றன.
திங்கட்கிழமை இரவு கடல் சீற்றத்தினால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கிரேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் ரயில் பாலத்தின் தூண்களுக்கு இடையில் சிக்கியது.
இந்த விபத்தை தொடர்ந்து திங்கட்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு 210 பயணிகளுடன் புறப்பட்ட சேது விரைவு ரயில் பாம்பன் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்த சேது விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து ரயில் பாலத்தில் சிக்கிய மிதவையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.