tamilnadu

img

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு

சென்னை, பிப். 25- சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட உத்தரவில், தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் லென்டில் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நடப்பாண்டின் கால அவகாசம் பிப். 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இருப்பினும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய்க்கு ரேஷன் அட்டைதாரர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் வரும் நிதியாண்டிலும் நீட்டிப்பதன் மூலம் வெளிச்சந்தையில் உள்ள பொருள்களின் விலையை கட்டுப்படுத்த முடியும். எனவே, சிறப்பு பொது விநியோக திட்டத்தை அடுத்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு திட்டத்தை நீட்டித்து அறிவித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;