tamilnadu

img

மேட்டுப்பாளையம் - சுவர் இடிந்து 17 பேர் பலி...மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

மேட்டுப்பாளையத்தில் சுவர் விழுந்து 17 பேர் பலியான கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு  போராட்டத்தில்  ஈடுபட்ட 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவை மற்றும் சேலம் சிறைகளில் அடைத்தனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம், அரசு வேலை, வீட்டு உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் தமிழ் புலிகள், திராவிட தமிழர் கட்சி, விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் திங்களன்று மாலை உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, சமத்துவ கழக தலைவர் கார்க்கி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஹரிமன்னன் உட்பட 25 பேரைக் காவல்துறை திங்களன்று கைது செய்தனர். இதன்பின்னர் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் அவர்கள் மிது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் அவர்களை மதுக்கரை நீதிமன்ற நீதிபதியிடம் செவ்வாயன்று ஆஜர்படுத்தி கோவை மற்றும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். நீதி கேட்டு போராடியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

;