tamilnadu

img

பயணிகளின் உயிரோடு விளையாடும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை, பிப். 17- மெட்ரோ ரயில் நிர்வாகம் உரிய பயிற்சி இல்லாத ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தி ரயில் பயணிகளின் உயிரோடு விளையாடுகிறது என சென்னை மெட்ரோ ஊழியர் சங்கத்தின் செயல் தலைவர் அ.சவுந்தரராசன் குற்றம்சாட்டினார். மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப்போக்கை  கண்டித்து வரும் 25ஆம் தேதிக்கு மேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை குறளகம் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆணையர் ஜெயலட்சுமி முன்னிலையில் திங்களன்று (பிப். 17) சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சங்கத்தின் செயல் தலைவர் அ.சவுந்தரராசன், உதவி தலைவர் ஆர்.இளங்கோவன், சிஐடியு மாநில நிர்வாகி ஆறுமுக நயினார், தலைவர் பரமேஷ்வரன், செயலாளர் செந்தில், நிர்வாகத் தரப்பில் சட்ட ஆலோசகர் பாக்கியராஜ், வழக்கறிஞர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது:

மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கனவே அமலிலிருந்த 35 விழுக்காடு அலவன்ஸ், 20 நாட்கள் அரை ஊதிய விடுமுறை, 15 நாட்கள் விடுப்பு போன்ற சலுகைகள் இனி இல்லை எனத் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அந்த உத்தரவைத் திரும்பப்பெறக்கோரி தொழிலாளர்கள் முறையிட்ட போது நிர்வாகம் மறுத்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் சங்கம் அமைத்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம் தொழிற்சங்கத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.  தொழிற்சங்கம் அமைத்ததற்காக சங்க நிர்வாகிகள் 7 பேரை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு ஏப்ரல் 20, 30, மே 1 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதையொட்டி தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அறிவுரை வழங்கப்பட்டது. யார் மீதும் எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. பணி நீக்கம் செய்யப்பட்ட 7 நிர்வாகிகளும் முறையீடு செய்வார்கள். அவர்களுக்குச் சாதகமாக நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது. இந்த இரண்டு அறிவுரைகளையும் மீறி வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்த 280 தொழிலாளர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

சங்கத்திலிருந்து விலக மிரட்டல்

“சங்கத்திலிருந்து விலகிக் கொள்கிறோம்’’ என எழுதிக் கொடுத்தால் 7பேருக்கும் வேலை வழங்குகிறோம் என்று  நிர்வாகம் கூறியது. 3 பேர் சங்கத்திலிருந்து விலகுவதாகக் கடிதம் எழுதிக் கொடுத்தனர். அவர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டு, ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. “சங்கத்தை ஒழிப்பதற்காக உனக்குச் சலுகை அளிக்கிறேன்’’’ என்று கூறுவது தொழில் தகராறு சட்டப்படி நியாயமற்றது. தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும். அது தண்டனைக்குரிய குற்றமாகும். இப்போது 9 தொழிலாளர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களையும் வேலை நீக்கம் செய்வேன் என நிர்வாகம் கூறுகிறது. தற்போது 54 பேர் மீது குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. அதில் 6 பேருக்கு 6 வருட ஊதிய உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்த சர்வீசில் அந்த தொழிலாளிக்கு 5 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்படும். எந்த நிர்வாகமும் இவ்வளவு மோசமான தண்டனையை வழங்கியதில்லை. மேலும் இருக்கக் கூடிய 191 பேருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு அதுவும் நிலுவையில் இருக்கிறது. குடியிருப்புகளிலிருந்து தொழிலாளர்களை ஏன் வெளியேற்றக் கூடாது என்று நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களை வெளியேற்ற நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

வேண்டியவர்களுக்குப் பணி

2.5 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 300 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு 6 மாதம் தில்லி மெட்ரோவில் பயிற்சி, விமான நிலையத்தில் பயிற்சி என அனைத்துவிதமான பயிற்சியும் அளிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். பயிற்சி பெற்ற நிரந்தர தொழிலாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தி விட்டு, அந்த பணியிடங்களில் பயிற்சி இல்லாத  மேலாளருக்கு, அதிகாரிகளுக்கு வேண்டியவர்களைப் பணி அமர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பந்தம் மூலம் கொள்ளையடிப்பதற்காக பயணிகளின் உயிரோடு மெட்ரோ நிர்வாகம் விளையாடிக் கொண்டிருக்கிறது.
 

ஊழல் முறைகேடுகளுக்கு வாய்ப்பு 

இந்த நிறுவனத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள பன்சால் தொடர்ந்து 6 வருடமாக இங்கேயே பணியாற்றுகிறார். ஐஏஎஸ் அதிகாரிகள் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது. அப்படித் தொடர்ந்து பணியாற்றினால் கூட்டாகச் சேர்ந்து ஊழல் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொது விதி இருக்கிறது. ஆனால் லட்சக்கணக்கான பணம் புழங்கக் கூடிய இந்த நிறுவனத்தில் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கும் மேல் அவர் நீடிப்பதில் எங்களுக்குப் பல சந்தேகம் எழுகிறது. எனவே பொது விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வேலைநிறுத்த நோட்டீஸ்

சென்னை மெட்ரோ நிர்வாகம் தொழிலாளர் துறையை மதிக்கவில்லை, இருக்கின்ற சட்டங்களை மதிப்பதில்லை, நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கவில்லை. தொழிலாளர் துறை வழங்கியுள்ள அறிவுரை உள்ளிட்ட எந்த மரபுகளையும் மதிக்கவில்லை. ஸ்டேண்டிங் ஆர்டர் சட்டம், ஐடி சட்டம் பொருந்தாது என்கிறார்கள். இது, தமிழகத்தில் தனியார் நிறுவனம் கூடச் செய்யத் தயங்குகிற மிக மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த ஒரு வருடமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் இருந்தோம். அத்தனை தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது வேறு வழியில்லாமல் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளோம். 25ஆம் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.  இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர்களை, அரசியல் கட்சித் தலைவர்களைச்  சந்தித்து ஆதரவு திரட்டப் போகிறோம். பேச்சுவார்த்தை செவ்வாயன்றும் (பிப். 18) நடைபெற உள்ளது. சமரச பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.



 

;