tamilnadu

img

ஏப்ரல் மாதத்தின் வாகன விற்பனை 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி

ஆட்டோமொபைல் துறையில் ஏப்ரல் மாதத்தின் வாகன விற்பனை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த 5 மாதங்களாக விற்பனை சரிந்து கொண்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனை 17 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகனங்கள் தேவை குறைவு, எரிபொருள் விலை உயர்வு, காப்பீட்டுத் தொகை உயர்வு, பணப்புழக்கம் குறைவு போன்ற காரணங்களால் வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.  

இது குறித்து, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 2,47,541 யூனிட்களாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விற்பனை 2,98,504 யூனிட்களாக இருந்தது. அதேபோல் கார் விற்பனை 19.93 சதவீதம் சரிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், கார் விற்பனை 1,60,279 யூனிட்களாக இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 2,00,183 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் விற்பனையும் 11.81 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், மோட்டார் சைக்கிள் விற்பனை 1,60,279 யூனிட்களாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டில், 12,30,046 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. மொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 16.36 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் அனைத்து ரக வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 15.93 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.