tamilnadu

இந்நாள் டிச. 30 இதற்கு முன்னால்

1906 - டாக்காவில் நடைபெற்ற அகில இந்திய முகம்மதியக் கல்வி மாநாட்டில், அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானது. 1857இன் முதல் விடுதலைப் போருக்குப்பின், இந்தியாவின் ஆட்சி, கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, இங்கிலாந்து அரசிடம் சென்றுவிட்டது. சிப்பாய்க் கலகத்திற்கு மத உணர்வுகள் பாதிக்கப்பட்டது காரணமாக அமைந்ததால், அவ்வாறு மீண்டும் நடைபெறாமலிருக்க, இந்தியர்களின் மத உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்ள ஆங்கிலேய அரசு திட்டமிட்டு, ஆங்கிலம் பயின்ற இந்தியர்களை அரசுப் பணிகளில் நியமிக்கத் தொடங்கியது. இந்தியாவில் அமைதியைப் பேணுதல் ஆங்கிலேய அரசின் நோக்கமில்லை. ஆனால், இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட பருத்தி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் இங்கிலாந்தின் தொழில்களை வேகமாக வளரச் செய்திருந்தன. அதற்கு இக்குழப்பங்கள் இடையூறாகிவிடும் என்பதால், மீண்டும் மத அடிப்படையிலான சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்பதில் இங்கிலாந்து எச்சரிக்கையாக இருந்தது. மேற்கத்திய கல்வி பெற்றிருந்த இந்துக்கள், ஆங்கிலேய அரசுப் பணிகளுக்குச் சென்று, சில உயர் பதவிகளையும் அடையத் தொடங்கியிருந்தனர். கல்வியே மேல் சாதியினருக்கு மட்டும்தான் எனும்போது, மேற்கத்திய கல்வியும் அவர்களுக்குத்தான் கிடைக்கும் என்பதையும், அதனால் இந்துக்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மேல்சாதி இந்துக்கள்தான் என்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், மேற்கத்திய கல்வியை தங்கள் சமயத்துக்கு விரோதமானதாக இஸ்லாமியர்கள் கருதியதால், படிக்கவில்லை. தங்கள் சமயத்தவர்கள் மேற்கத்திய கல்வியைப் புறக்கணிப்பதால் பின்தங்கியிருப்பதைச் சரிசெய்ய விரும்பிய சையத் அகமத் கான், 1875இல் முகம்மதன் ஆங்லோ-ஓரியண்ட்டல் கல்லூரியை அலிகாரில் தொடங்கினார். இதுவே பின்னாளில்(1920இல்) அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாகியது. இஸ்லாமியர்களைப் படிக்கவைக்க இதிலிருந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் அலிகார் இயக்கம் என்றே அழைக்கப்பட்டன. இதற்காகவே 1886இல் அகில இந்திய முகம்மதியக் கல்வி மாநாடு என்ற இயக்கத்தையும் தொடங்கி, ஆண்டுதோறும் வெவ்வேறு நகரங்களில் மாநாடு நடத்தி, இஸ்லாமியர்களை மேற்கத்திய கல்வி கற்க வலியுறுத்திய அவர், இந்த அமைப்பில் அரசியல் பேசுவதில்லை என்பதையும் அடிப்படைக்கொள்கையாக வைத்திருந்தார். 1905இன் வங்கப் பிரிவினையில் நன்மையடைந்த கிழக்கு வங்க மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்களாக இருந்த நிலையில், மேற்கு வங்கத்திலிருந்த இந்துக்கள் அப்பிரிவினைக்குக் காட்டிய கடுமையான எதிர்ப்பு, இஸ்லாமியர்களின் நல்வாழ்விற்கு இந்துக்கள் எதிர்ப்பாகவே இருப்பார்கள் என்ற உணர்வைத் தோற்றுவிக்க, அரசியல் பேசுவதில்லை என்று தொடங்கப்பட்ட இயக்கம், இஸ்லாமியர்களுக்கான அரசியல் இயக்கமாகியது!

;