tamilnadu

img

வீட்டில் துவங்கிய போராட்டம் - பி.ராமமூர்த்தி

காங்கிரஸ்,  காங்கிரஸ் சோசலிஸ்ட்,  கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகவும் புகழ்மிக்க தொழிற்சங்கத் தலைவராகவும் இந்திய தொழில்வளர்ச்சிக்கு உறுதுணையாய்த் திகழ்ந்த தனிப்பெரும் தலைவராகவும் சிறப்புற்று விளங்கிய தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள். அவர் இளமைக் காலம் முதலே குறிப்பாக மாணவப் பருவம் முதலே நாட்டின் விடுதலைப் போரிலும் மக்களின் சமத்துவ வாழ்வுக்கான போரிலும் முன்னின்றவர். அவர் காங்கிரஸ் கட்சி, பகத்சிங்கின் நவஜவான் பாரத் சபா, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் தீரமுடன் செயல்பட்டவர். அவர் கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தது பற்றிய அவரது கருத்துக்கள் இங்கே தரப்படுகின்றன.

முதலாம் உலகயுத்தத்திற்குப் பின் 1919ல் காங்கிரஸ் இயக்கம் ஒரு பிரபல இயக்கமாக வளர்ந்து வந்தது. காந்தி அரசியல் மேடையில் பிரபலமடைய ஆரம்பித்த நேரம். பிரிட்டிஷ் அரசு ரௌலட் சட்டம் என்ற ஆள்தூக்கிச் சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டத்தின்கீழ் எந்தவொரு குடிமகனும் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம். இத்தகைய மிருகத்தனமான சட்டத்தை எதிர்த்து ஏப்ரல் மாதம் 6ஆம்தேதி அவரவர் வீட்டில் உண்ணாவிரதம் இருக்கும்படியும், மாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் காந்தி நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். நாடு பூராவிலும் உண்ணாவிரதம் அனுஷ்டிக்கப்பட்டது. நானும் என் வீட்டில் உண்ணாவிரதம் இருந்தேன். அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் மிகப்பெரிய கூட்டம் நடைபெற்றது. அக்காலத்தில் ஒலிபெருக்கி வசதி ஏற்பட்டிராததால் அந்த பெரிய கூட்டம் திலகர் கட்டத்திலிருந்து சுங்குவார் தெரு சந்திப்புவரை 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முதல் கூட்டத்தில் ஒருவர் பேசியவுடன் அதே பேச்சு இதர ஆறு பகுதிகளிலும் ஆறு பேச்சாளர்களால் திருப்பிக் கூறப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 13ஆம்தேதியன்று ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற பயங்கர படுகொலையைக் கண்டித்து நாடெங்கும் பெரும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.

வீட்டிலே ஒரு போராட்டம்

அன்னிய துணிகளைப் பகிஷ்காரம் செய்ய வேண்டுமென்று காந்திஜி விடுத்த கட்டளைக்கிணங்க, வீட்டில் எனக்கு வாங்கிக் கொடுத்திருந்த அந்நியத் துணிகளை உடுத்த மறுத்தேன். கதர்த்துணி வாங்கிக்கொடுக்கும்படி வீட்டில் அடம்பிடித்தேன். என் அண்ணன் மறுத்துவிட்டார். அவர் அரசாங்க ஊழியராக இருந்ததால் கதர்கட்டுவதில் மிகுந்த பயம் அவருக்கு உண்டு. எனவே என்னுடைய கோரிக்கையை அடைவதற்காக, பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின் என் அண்ணன் கதர்த்துணி வாங்கித்தர சம்மதித்தார். அதன் பின் தான் பள்ளிக்குச் சென்றேன்.

நேருவின் பள்ளியில்

சுயராஜ்யக் கட்சி உருவானதும் 1923ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில், திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் சார்பாக எஸ்.சத்தியமூர்த்தி போட்டியிட்டார். அவருடைய வீடு புரசைவாக்கத்திலிருந்ததென்றாலும், அவர் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். நான் அவருடைய தேர்தல் வேலைகளில் தீவிரமாகப் பங்கு கொண்டேன். அப்பொழுதுதான் முதல் தடவையாக காமராஜைச் சந்தித்தேன். சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்திருந்த காமராஜ், சத்தியமூர்த்தியின் தேர்தல் வேலைக்காக திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தார். நாங்களிருவரும் மிக நெருங்கிய நண்பர்களானோம். அதே நேரத்தில்தான் சத்தியமூர்த்தியோடும், என்.சீனிவாச அய்யங்காரோடும் எனக்கு நெருங்கிய தொடர்பேற்பட்டது. அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி வெற்றியடைந்தார். சத்தியமூர்த்தியின் தேர்தல் சமயத்தில் ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாவது படிவத்தில் படித்துக் கொண்டிருந்தேன். தேர்தல் முடிந்த பின், அந்தப் பள்ளிப்படிப்பின் மீது எனக்கு ஒரு வகை புரியாத ஒரு வெறுப்பேற்பட்டது. அச்சமயத்தில் அலகாபாத்திலிருந்த தேசியப் பள்ளியை புருஷோத்தம தாஸ் தாண்டனும், ஜவஹர்லால் நேருவும் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்பள்ளியில் சேர வேண்டுமென்று முடிவு செய்து கையிலிருந்த சிறிது பணத்துடன், டிக்கெட் இல்லாமல், வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல் புறப்பட்டுவிட்டேன். டிக்கெட் இல்லாததால் பல இடங்களில் இறக்கிவிட்டார்கள். ஒன்றிலிருந்து மற்றொரு ரயிலுக்கு மாறி மாறி அலகாபாத்துக்கு போய்ச் சேர்ந்தேன். அலகாபாத்தை வந்தடைந்தவுடன் லோகாகஞ்ச் என்றழைக்கப்படும் “இரும்புப் பேட்டையிலிருந்த” தேசியப் பள்ளியைத் தேடி வந்தடைந்தேன். பள்ளியில் என்னைச் சேர்த்து கொண்டார்கள். 15 மாணவர்கள் மட்டுமே அப்பொழுது படித்து வந்தார்கள். ஏனென்றால் தேசியப் பள்ளிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிரானது. காங்கிரஸ் தலைவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக்கு அனுப்புவதில்லை. அப்பள்ளியை நடத்தி வந்த புருஷோத்தமதாஸ்தாண்டனும், ஜவஹர்லால்நேருவும் அடிக்கடி வந்து பல்வேறு விஷயங்களைக் குறித்து பிரசங்கம் செய்வார்கள். நேரு மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு. அங்கிருந்த மாணவர்களிலேயே நான்தான் வயதில் மிகவும் சிறியவன் என்பதோடு, நாட்டின் அரசியலில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு நேருவுக்கு என் மீது பிரியம் உண்டு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவருடைய இல்லமான ஆனந்த பவனுக்கு, உணவருந்த வரும்படி கூப்பிடுவார்.

சில மாதங்கள் கழித்து அங்கிருந்த மாணவர்கள் ஒவ்வொருவராக பள்ளியைவிட்டு வெளியேறிவிட்டார்கள். கடைசியில் 1925 ஏப்ரல் மாதத்தில் நானும், மற்றொரு மாணவனுமே மிஞ்சினோம். இனி மேலும் அங்கே தங்கியிருப்பது பயனற்றது என்று தீர்மானித்துநேருவிடமும், தாண்டனிடமும் என் முடிவைக் கூறினேன். நேர வாங்கிக் கொடுத்த டிக்கெட்டோடு, ஏப்ரல் மாதத்தில் சென்னைக்கு திரும்ப வந்து சேர்ந்தேன். என் வீட்டில் என்னைத் திட்டினார்கள். அதே ஆண்டில் ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் திரும்பவும் ஐந்தாவது படிவத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். என் உயர்நிலைப்பள்ளி படிப்பில் இரண்டு வருட காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. என்னுடன் பள்ளியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.ஆர்.கைவார் (பின்னாளில் தமிழக அரசின் பிரதம காரியதரிசியாக பணியாற்றியவர்) ராகவேந்திரராவ், விண்வெளியியல் நிபுணர் எஸ்.சந்திரசேகரன், (இவர் சர்.சி.வி.ராமனின் சகோதரர் சி.எஸ்.அய்யரின் மகன்) வே.பா.கோபால், பிரபல கர்நாடக இசை வித்வானாக விளங்கிய ஜி.என்.பாலசுப்பிரமணியம் முதலியவர்கள்.

வாலிபர் கழகம்

1925ஆம் ஆண்டில் சென்னை நகரில், வாலிபர் கழகத்தை ஆரம்பித்தோம். அதில் என்னுடன் சேர்ந்திருந்தவர்களில் சிலர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (திரைப்பட டைரக்டர்), வி.கே.சேஷகிரி, எஸ்.எம்.பாசில் முதலியோர், ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வை வாலிபர்கள் மத்தியில் உருவாக்கவும், அவர்களை தேசிய எண்ணங் கொண்டவர்களாக மாற்றவும் ஒரு பரந்த வாலிபர் இயக்கத்தை உருவாக்கவும் இந்தக் கழகம் பணியாற்றியது.


 

;