tamilnadu

img

4 நாட்களில் ரூ.80,000 கோடி அதிகரித்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!

மும்பை:
கெரோனாவால் உலகமே கதறிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. உலகக் கோடீஸ்வரர்களே கூட சிலர் கொரோனா தாக்கத்திற்குத் தப்பவில்லை.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பெர்னார்ட் அர்னால்ட், ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர். பணக்காரர்கள் அதிகம் செலவிட விரும்பும் ஹென்னிசி காக்னக், டோம் பெரிக்னான் ஷாம்பெயின், பெண்டி ஹேண்ட்பேக், பல்கரி கடிகாரம், வெனிசில் உள்ள சிப்ரியானி ஹோட்டல் என அனைத்துமே பெர்னார்ட் அர்னால்ட்டுக்கு சொந்தமானவைதான். இவை அனைத்தும் தங்க முட்டையிடும் வாத்தை போல லாபம் ஈட்டிக் கொடுத்தவை.
ஆனால், இவரது பெர்னார்ட் அர்லாண்டின் எல்.வி.எம்.எச். நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டில் 19 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மேலும், அவரது நிகர சொத்து மதிப்பு 3 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. இதேபோல பல பெரும்பணக்காரர்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மட்டும் இந்த கொரோனா நெருக்கடியிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் குவித்துள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை, கடந்த டிசம்பர் 2019 காலத்தில் அதிகபட்சமாக 1,617 ரூபாயைத் தொட்டது . அப்போது ஒட்டு மொத்த ரிலையன்ஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வந்தது. அதன்பின் கொரோனாவால் சர சரவென பங்குகளின் விலை சரியத் தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் 2020-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 885 ரூபாய் வரை இறங்கியது.

ஆனால் இப்போது மீண்டும் ரிலையன்ஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 1,600 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.ரிலையன்ஸ் ஜியோவில் முகநூல் நிறுவனம் 9.9 சதவிகித பங்குகளை வாங்கியது, அமெரிக்காவின் விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 2.32 சதவிகித பங்கை வாங்கியது. அதே போல சில்வர் லேக் கம்பெனியும் சுமாராக 1.15 சதவிகித பங்குகளை வாங்கியது. 
இப்படி தொடர் முதலீடுகள் வந்ததால், இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸின் பங்கு விலை தாறுமாறாக ஏறி இருக்கிறது.கடந்த வர்த்தக வாரத்தின் கடைசி நான்கு நாட்களில் மட்டும், ரிலையன்ஸ் பங்குகள் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் குவித்துள்ளது.

இந்தியாவிலேயே ஒரு கம்பெனி மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பைத் தொட்ட நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உருவெடுத்தது. தற்போது கொரோனா பாதிப்பிலும் அதற்கு எந்த குறையும் ஏற்படவில்லை. ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 9.90 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

;