திருநெல்வேலி, மே 19-குற்றாலத்தில் பெய்த கன மழையால் அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.தென்காசி, குற்றாலம் மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சிலவாரங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் பொதுமக் களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சனிக்கிழமைமாலையில் தென்காசி, குற்றாலம்மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இரவு 8 மணி வரை மழைநீடித்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மிக மெதுவாகச் சென்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பரிதவித்தனர்.குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழத் துவங்கியது. ஞாயிறு காலையில் மெயின் அருவியில் விழுந்த தண்ணீரில் சுற்றுலாப்பயணிகள் போட்டி போட்டுக் கொண்டுகுளித்து மகிழ்ந்தனர். பகலில் வெப்பம்மிகுதியாக இருந்ததால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் நின்று குளித்தனர். தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும். இல்லையேல் ஓரிரு நாட்களில் அருவிகளில் தண்ணீர் வரத்து நின்று விடும்.